பெய்ஜிங்: ஆளில்லா வானூர்திகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதாவைச் சீனா நிறைவேற்றியுள்ளது.
வேகமாக வளர்ந்துவரும், ஆளில்லா வானூர்தி போன்ற 1,000 அடிக்குக்கீழே உள்ள வான்வெளியை வர்த்தகத்திற்குப் பயன்படுத்தும் துறைகளை மறுவடிவமைக்க அந்நாடு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் இது ஒரு பகுதி எனச் சீன அரசாங்க ஊடகம் சனிக்கிழமை (டிசம்பர் 27) செய்தி வெளியிட்டுள்ளது.
பொது விமானப் போக்குவரத்துச் சட்டத்தில் ஆளில்லா வானூர்திகளுக்கான ஒழுங்குமுறை இடைவெளியை நிரப்ப அவற்றிற்கு விமானத் தகுதிச் சான்றிதழ் வழங்குவது குறித்த ஒரு புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது.
அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தை அந்நாட்டு தேசிய மக்கள் காங்கிரசின் செயற்குழு டிசம்பர் 27ஆம் தேதி அங்கீகரித்தது.
சீன அறிவியல் கழகம், பீக்கிங் பல்கலைக்கழகம், சீனாவின் பொது விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றின் மதிப்பீடுகளின்படி, 2025ஆம் ஆண்டில் 1.5 டிரில்லியன் யுவானாக இருக்கும் ஆளில்லா வானூர்தித் துறையின் வர்த்தகப் பயன்பாடு 2030ஆம் ஆண்டுக்குள் இரண்டு டிரில்லியன் யுவானுக்கு (S$365 பில்லியன்) அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், அவற்றில் கவனம் செலுத்தும் வகையில் சீனாவின் உத்திபூர்வ முன்முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தத் திருத்தப்பட்ட பொது விமானப் போக்குவரத்துச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, ஆளில்லா வானூர்திகளின் வடிவமைப்பு, உற்பத்தி, இறக்குமதி, பராமரிப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சீன வான்வெளியில் பறப்பதற்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வானூர்தி உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு கருவிக்கும் ஒரு தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீட்டை ஒதுக்க வேண்டும்.
2024ஆம் ஆண்டு முதல் ஆளில்லா வானூர்திகளுக்கான விதிமுறைகளைச் சீனா அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

