பெய்ஜிங்: தற்சார்புப் பொருளியலுக்கு சீனா முன்னுரிமை அளித்து வரும் வேளையில், முழுக்கவும் அந்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயணிகள் விமானம் சேவையைத் தொடங்கியிருப்பது அதற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் சி919 என்ற அவ்விமானத்தை மே 28 முதன்முதலில் சேவையில் ஈடுபடுத்தியது.
காலை 10.32 மணிக்கு அவ்விமானம் ஷாங்காயிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குக் கிளம்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கோமாக்' எனப்படும் சீன வணிக விமானப் போக்குவரத்து நிறுவனம் 15 ஆண்டுகளுக்குமுன் ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்குப் போட்டியாக சி919 விமானத்தை உருவாக்கத் தொடங்கியது.
இந்தத் திட்டம் நாட்டின் மிகச் சிறந்த புத்தாக்கச் சாதனைகளுள் ஒன்று எனச் சீன அதிபர் ஸி ஜின்பிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் சென்ற 2021ஆம் ஆண்டு ஐந்து சி919 விமானங்களைக் கேட்டிருந்தது. முதல் விமானம் கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய நான்கு விமானங்கள் இவ்வாண்டில் ஒப்படைக்கப்படும்.