பெய்ஜிங்: ஜப்பான் சீனாவின் ராணுவத்திற்கு மிரட்டல் விடுப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியிருக்கிறார்.
சீனப் போர் விமானங்கள் ஜப்பானிய ராணுவ விமானத்தை நோக்கி அவற்றின் ரேடார் கருவிகளைத் திருப்பியதாகத் தோக்கியோ கூறியதைத் தொடர்ந்து பெய்ஜிங்கின் கருத்து வந்துள்ளது.
சீனாவின் நடவடிக்கை ஆபத்தானது என்று ஜப்பான் கண்டித்தது. சீனக் கடற்படையின் கப்பல்களுக்கு அருகில் சென்று ஜப்பானிய விமானங்கள் மீண்டும் மீண்டும் தொந்தரவு கொடுத்ததாகப் பெய்ஜிங் தெரிவித்தது. மியாக்கோ நீரிணைக்குக் கிழக்கே ஏற்கெனவே அறிவித்தபடி, விமானந்தாக்கிக் கப்பல்களில் பயிற்சிகளை மேற்கொண்டதாக அது சொன்னது.
ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி, தமது நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தைவானுக்கு எதிராகச் சீன ராணுவம் நடந்துகொண்டால் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என்று சென்ற மாதம் (நவம்பர் 2025) எச்சரித்திருந்தார். அதனைச் சீனா வன்மையாகக் கண்டித்தது. அதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டது.
பெய்ஜிங்கில் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் யோஹான் வாடேஃபுல்லைத் திங்கட்கிழமை (டிசம்பர் 8) சந்தித்தபோது திரு வாங் அவ்வாறு சொன்னார். இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டாகும் நிலையில், அதில் தோல்வியைத் தழுவிய ஜப்பான் அதிகக் கவனத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார் திரு வாங்.
ஆனால், இப்போது அதன் தற்போதைய தலைவர், தைவானிய விவகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்த முயல்வதாக அவர் சொன்னார். ஜப்பானியப் பிரதமர், பிரச்சினையைத் தூண்டிவிட்டுச் சீனாவை ராணுவ ரீதியாய் அச்சுறுத்துவதாகத் திரு வாங் கூறினார். சீனாவின் அதிகாரத்துவ ஊடகமான ஸின்ஹுவா அந்தத் தகவலை வெளியிட்டது.
1895 முதல் 1945 வரை தைவானைக் காலனித்துவப் பகுதியாக நடத்திவந்தது ஜப்பான். போருக்குப் பிறகு சீனக் குடியரசிடம் தைவான் ஒப்படைக்கப்பட்டது.
தைவான், சீனாவின் ஒரு பகுதி என்பது மாற்றமுடியாத, சந்தேகத்திற்கு இடமில்லாத ஒன்று. அது வரலாற்று ஆவணங்கள் மூலமும் சட்ட ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் திரு வாங்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தைவான் அதனை மறுக்கிறது. சீனா, வரலாற்றை மாற்றி எழுதுவதாக அது மீண்டும் மீண்டும் குறைகூறி வருகிறது.
‘சீனக் குடியரசு’ என்பதுதான் இன்றுவரை தைவானின் அதிகாரத்துவப் பெயராக உள்ளது.

