முதலீட்டாளர்களுக்கு வரி இல்லா வாயிற்கதவுகளை திறந்துவிடும் சீனா

2 mins read
7b2741a6-c602-49c5-947b-72625ef5ce35
உலகம் முழுவதும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வரிகளைக் கூடுதலாக உயர்த்தியும், வர்த்தகத் தடைகளை விதித்தும் வணிகச் சந்தைகளை மூடி வரும் வேளையில், சீனா அதன் ஹைனான் தீவைத் தாராளமய வணிகத்தை நடத்திக்காட்டும் ‘இலவச வர்த்தகத் துறைமுகம்,’’ என்று முன்மொழிந்துள்ளது. - படம்: சீனா நியூஸ் செர்விஸ்

ஹைகோவ்: உலகம் முழுவதும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வரிகளைக் கூடுதலாக உயர்த்தியும், வர்த்தகத் தடைகளை விதித்தும் தங்கள் வணிகச் சந்தைகளை மூடி வரும் வேளையில், சீனா அதற்கு மாறாக வரி இல்லாத மண்டலங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது.

அவ்வகையில், அந்நாட்டின் தெற்குக் கடற்பகுதியில் உள்ள ஹைனான் தீவை, முழுக்க முழுக்க வர்த்தகத் துறைமுகமாக உருமாற்றம் செய்துள்ளது சீனா.

சிங்கப்பூரை விட 50 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டது ஹைனான் தீவு.

கடந்த மாதம் முதல் இங்கு மேற்கொள்ளப்படும் பெரும்பாலான இறக்குமதிகளுக்கான வரிகளை முற்றிலும் நீக்கிய சீனா, தாராளமய வணிகத்தை நடத்திக்காட்டும் ‘இலவச வர்த்தகத் துறைமுகம்,’’ என்றும் இப்பகுதியை முன்மொழிந்துள்ளது.

சீன அதிபர் ஸி ஜின் பிங், உலக வர்த்தக அரங்கில் ‘‘சீனாவின் புதிய சகாப்தத்திற்கான முக்கிய நுழைவாயில் ஹைனான் துறைமுகம்’ என்று கூறியுள்ளார்.

மேலும், ஹைனான் தீவை வெறும் வணிகப் பொருள்கள் கைமாறும் பகுதியாக மட்டுமல்லாமல், உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளின் வட்டாரமாக மாற்றும் இலக்குடனும்  சீனா செயல்பட்டு வருகிறது என்றும் உள்ளூர் செய்திக்குறிப்புகள் கூறின.

சீனாவின் முக்கிய நகரங்கள் வணிகக் குழுமங்களுக்கு  25 விழுக்காடு வரி விதிக்கின்றன.

எனினும் ஹைனான் தீவில் பதிவு செய்து இயங்கும் வியாபாரக் குழுமங்களுக்கு 15 விழுக்காடு  வரிகளே விதிக்கப்படுகின்றன.

இத்தகைய குழுமங்களுக்கு ஹாங்காங்கில் 16.5 விழுக்காட்டளவு வரி விதிக்கப்படுகிறது. எனவே குறைவான வரி விகிதங்களால், ஹைனான் தொழிற்துறையில் கால்பதித்து, பதிவு செய்வதற்கு நிறுவனங்கள் பேரளவில் ஆர்வம் காட்டிவருகின்றன.

குறிப்புச் சொற்கள்