கொழும்பு: இலங்கையும் சீனாவும் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டுக்கான முக்கிய ஒப்பந்தம் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளார்.
அவரது பயணத்தின்போது, ஜனவரி 16ஆம் தேதி காலை, இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிறுவனமான சைனோபெக்குக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்கீழ், இலங்கையின் அம்பாந்தோட்டை வட்டாரத்தில் 200,000 பீப்பாய் கொள்ளளவு கொண்ட எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும். இத்திட்டத்தில் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சுத்திகரிப்பு ஆலையில் சுத்திகரிக்கப்படும் எண்ணெய்யில் பெரும்பகுதியை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்படுகிறது. அதன் மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிப்பது நோக்கம்.
சீனாவின் இந்தப் பெரிய முதலீடு, இலங்கையின் பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாய் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அம்பாந்தோட்டை வட்டாரத்தில் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அது உதவும் என்று கூறப்படுகிறது.
வருங்காலத்தில் ஒட்டுமொத்தமாக இலங்கை மக்கள் அனைவரும் இதனால் நன்மையடைவர் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில், இலங்கையின் வெளியுறவு, தொழிலாளர், சுற்றுப்பயணத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத் தகவல் பிரிவின் தலைமை இயக்குநர் எச்.எஸ்.கே.ஜே. பண்டார ஆகியோருடன் இலங்கைப் பேராளர்களும் கலந்துகொண்டதாக இலங்கை அதிபர் ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி ஸ்ரீலங்கா மிர்ரர் செய்தி இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

