5% பொருளியல் வளர்ச்சிக்கு குறிவைக்கும் சீனா

5% பொருளியல் வளர்ச்சிக்கு குறிவைக்கும் சீனா

2 mins read
667e61ec-835e-4ea4-a3ab-21bfab5fcc64
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் சோயா விதை இறக்குமதி உரிமங்களைச் சீனா செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. - படம்: புளூம்பர்க்

பெய்ஜிங்: அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் மோசமடைந்துள்ளது.

வர்த்தகப் போர் நிலவும்போதிலும் ஏறத்தாழ 5 விழுக்காடு பொருளியல் வளர்ச்சிக்குச் சீனா குறிவைத்துள்ளது.

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்தரக் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 5) தொடங்கியது.

அதில் சீனப் பிரதமர் லீ சியாங் உரையாற்ற இருக்கிறார்.

பொருளியல் நிபுணர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரது உரை பெரும்பாலும் அமையும் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இருப்பினும், சீனா எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும்போது இந்த 5% வளர்ச்சி இலக்கை எட்டுவது சவால்மிக்கதாக இருக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.

சீனாவின் பொருளியல் இவ்வாண்டு 4.5 விழுக்காடு விரிவடையும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

சீனாவின் பொருளியல் 4.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களின் சோயா விதை இறக்குமதி உரிமங்களைச் சீனா செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குள் மரத்துண்டுகள் இறக்குமதி செய்யப்படுவதை சீனா அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது.

அண்மையில் சீனப் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிவிதிப்பை அறிமுகப்படுத்தியது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா விதைகளில் ஏறத்தாழ பாதி, சீனாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

2024ஆம் ஆண்டில் சோயா விதைகளின் வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 12.8 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்