பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்து

2 mins read
bc385f80-ad17-4027-abf5-5ea6db54d8a9
அமெரிக்காவில் சீனா செய்ய இருக்கும் பெருமுதலீட்டு விவரங்கள் இன்னும் தெளிவற்ற இருப்பதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சீனாவின் வர்த்தக விவகாரங்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை மீட்டுக்கொள்ளுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தி உள்ளது.

அத்தகைய கட்டுப்பாடுகள் தனது பெருமுதலீட்டுத் திட்டத்திற்குக் குறுக்கே நிற்கக்கூடும் என்று சீனா கருதுகிறது.

அத்துடன், அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள சீனாவின் தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட வேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் பேச்சுவார்த்தைக் குழுவினர் டிரம்ப் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இந்த யோசனைகள் யாவும், சென்ற மாதம் மட்ரிட்டில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின்போது எழுப்பப்பட்டதாக, பெயர் குறிப்பிட விரும்பாத சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தச் சந்திப்புகளின்போது சீனாவின் சமூக ஊடகப் பெருநிறுவனமான டிக்டாக்கை அமெரிக்காவில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கான கட்டமைப்பு உடன்பாடு ஒன்றை அமெரிக்க, சீனத் தரப்புகள் செய்துகொண்டன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், டிக்டாக் தொடர்பான தேசியப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியபோதிலும் அந்த உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் சீனா US$1 டிரில்லியன் (S$1.29 டிரில்லியன்) மதிப்பிலான முதலீடுகளை அமெரிக்காவில் செய்ய இருந்ததாகவும் ஆனால், தற்போது அந்த முதலீட்டின் மதிப்பு என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதுபற்றி அறிந்த அதிகாரி ஒருவர் கூறியதாக புளூம்பெர்க் செய்தி குறிப்பிடுகிறது.

மாட்ரிட் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் பேசப்பட்டதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், ‘ஃபாக்ஸ் பிஸ்னெஸ்’ ஊடகத்திடம் கூறினார்.

சீனா எவ்வளவு முதலீட்டை அமெரிக்காவில் செய்ய இருக்கிறது என்பது பற்றியும் அதன் விவரங்கள் குறித்தும் இன்னும் வினாக்கள் இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்