மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் மக்கள் கொந்தளிப்பு: பள்ளிகளில் துன்புறுத்தலைக் கடுமையாகக் கையாளச் சூளூரை

மாணவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் மக்கள் கொந்தளிப்பு: பள்ளிகளில் துன்புறுத்தலைக் கடுமையாகக் கையாளச் சூளூரை

2 mins read
ce6761e6-dc35-4dfa-af59-660084a4ce24
சிறுவர்களை அவர்களின் பள்ளி மாணவர்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகம் நடந்துவருவதை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க சீனா உறுதியெடுத்துள்ளது. - படம்: பிக்சாபே

பெய்ஜிங்: ஒரு சிறுவனின் உடல் சாம்பலாக எஞ்சிய சம்பவம், மார்ச் மாதம் நடந்ததை அடுத்து விசாரணையில் சிறுவனைக் கொன்று உடலுக்கு எரியூட்டியவர்கள் அவரின் வகுப்பு மாணவர்கள் என்று தெரியவந்தது.

பலகாலமாகவே பள்ளியில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார் அந்தச் சிறுவன். சிறுவனின் மின்பணப்பையில் இருந்த பணம்கூட துன்புறுத்தியவர்களுக்கு மாற்றப்பட்டது.

சிறுவனைத் துன்புறுத்திய நால்வர் 12 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது போதாது என்று இணையவாசிகள் கண்டனக்குரல் எழுப்பினர்.

அண்மையில், 14 வயதுச் சிறுமி தமது மணிக்கட்டுகளை உடைந்த கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு வெட்டிக்கொண்டார். பள்ளி மாணவர்கள் காலணிகளைக் கொண்டு அந்தச் சிறுமியைத் தாக்கியதுடன் கத்தியைக் காட்டியும் மிரட்டி இருந்தனர்.

துன்புறுத்திய கூட்டத்துக்கான தலைவர், சிறுமியை இழிவுபடுத்தத் தாக்குதலைக் காட்டும் காணொளிகளைச் சமூக ஊடகத்திலும் பதிவேற்றம் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

பொது இடத்தில் வகுப்பு மாணவரை ஆடைகளைக் களையச் செய்து அந்தக் காணொளியைச் சமூக ஊடகத்தில் எட்டு மாணவர்கள் பகிர்ந்த சம்பவம் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்தது.

பள்ளிகளில் இதுபோன்ற துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்ததை அடுத்து, இந்தப் போக்கை உடைத்தெறிய சீனா சூளுரைத்துள்ளது.

பள்ளித் துன்புறுத்தல் தொடர்பில் அடையாளம் காணவும் தடுக்கவும் தண்டனை அளிக்கவும் தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் கல்வி மற்றும் பொதுத்துறை பாதுகாவல் அமைச்சுகள் இதர அரசாங்கத் துறைகளுடன் இணைந்து கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

பள்ளித் துன்புறுத்தலால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாகத் தொடர்பு எண்கள், பள்ளிச் சமூகத்தில் துன்புறுத்தலுக்கு எதிரான தூதர்களை நியமித்தல், மாணவர்களின் மனரீதியான நலனைக் கண்காணிக்கும் முறையை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளும் நடந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்