தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சி

1 mins read
530b45ed-9225-478a-b623-e52329e76408
தைவான் அருகில் சீனப் போர்க் கப்பல். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: தைவானைச் சுற்றி போர்ப் பயிற்சி நடத்துவதாகச் சீன ராணுவம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) தெரிவித்தது.

இதற்காகத் தனது படைகளை அனுப்பிவைத்துள்ளதாக அது தெரிவித்தது.

தைவானை முற்றுகையிடுவது தொடர்பாகப் பயிற்சி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் கூறியது.

தைவானைச் சீனா தனது ஒரு பகுதியாகக் கருதுகிறது.

ஆனால் இதைத் தைவான் மறுக்கிறது.

தன்னை ஒரு தனிநாடாக அது அடையாளப்படுத்திக் கொள்கிறது.

இது சீனாவைக் கோபப்படுத்தியுள்ளது.

எனவே, தைவானைச் சுற்றி அது பலமுறை போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

போர்ப் பயிற்சிகளில் சீனாவின் போர் விமானங்களும் போர்க் கப்பல்களும் ஈடுபட்டு வருகின்றன.

இவை தனது எல்லைக்குள் நுழைந்துவிடுவதாக தைவான் பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.

சீனா தைவானை வேவு பார்த்து வருவதாகவும் ஊடுருவலில் ஈடுபட்டு வருவதாகவும் தைவானிய அதிபர் லாய் சிங் டே கடந்த மாதம் குறிப்பிட்டார்.

அவற்றுக்கு எதிரான பரிந்துரைகளை அவர் முன்வைத்தார்.

இதற்கிடையே, தைவானிய நீரிணையில் மேற்கொள்ளப்படும் கடற்படை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் சீன ராணுவத்தின் கிழக்குத் தளபத்தியம், வரைகலை ஒன்றை வெளியிட்டது.

அதில், தைவானை எச்சரிக்கும் விதமாக ‘நெருங்குகிறோம்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.

தைவான் பிரிவினைவாதப் போக்குடன் நடந்துகொள்வதாகவும் அதன் அழிவை அதுவாகவே தேடிக்கொள்வதாகவும் அது சாடியது.

குறிப்புச் சொற்கள்