பெய்ஜிங்: அமெரிக்காவுடன் பொருளியல் ரீதியாகப் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் செய்யும் நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.
சீனாவைப் பாதிக்கும் அளவில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யும் நாடுகள்மீது பெய்ஜிங் பதில் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சு திங்கட்கிழமை (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் சீனாவுடன் வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு வரி விதிப்பைக் குறைக்கவும் நீக்கவும் திட்டமிட்டுவருவதாக ‘புளூம்பர்க்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. அதை மேற்கோள்காட்டி சீன வர்த்தக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிவிப்பால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீடித்து வரும் வர்த்தகப் போர் மேலும் தீவிரமடையலாம் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராகப் பல வர்த்தக வரிகளை அறிவித்து வருகிறார். மேலும் அவர் பல உலக நாடுகளின் இறக்குமதிகளுக்கு அடிப்படை வரியும் விதித்துள்ளார்.
இருப்பினும் சீனாவைத் தவிர மற்ற உலக நாடுகள்மீது விதித்த வரியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் அதிபர் டிரம்ப்.
தற்போது சீனாவின் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 145 விழுக்காடு வரி விதித்துள்ளது. அதேபோல் அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 125 விழுக்காடு விதித்து பதிலடி கொடுத்தது.
“சமநிலை என்றுகூறி அமெரிக்கா அதன் வர்த்தகப் பங்காளிகளை அச்சுறுத்துகிறது. இதனால் உலக நாடுகள் வேறு வழி இல்லாமல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக,” சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“சீனா தனது கொள்கையிலும் அதன் பாதுகாப்பிலும் உறுதியாக உள்ளது. உலக நாடுகளுடன் ஒற்றுமையாக இருக்கவும் சீனா தயாராக உள்ளது,” என்று சீன வர்த்தக அமைச்சு கூறியது.
“இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலக நாடுகள் அமெரிக்கா பக்கம் செல்லவோ சீனா பக்கம் செல்லவோ தயாராக இல்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாடுகளும் பலவிதமான உதவிகளை வழங்கியுள்ளன. அதனால் நடுநிலையாகச் செயல்பட்டுத் தீர்வு காண வேண்டும்,” என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.