தைவானை முற்றுகையிடும் பயிற்சியை மேற்கொண்ட சீனா

1 mins read
5e7c52bb-d88c-482d-8ec4-cfda76fbe256
படம்: ஏஎஃப்பி -

தைவான் நீரிணையில் அமைதியைக் கட்டிக்காப்பதற்கும் தைவான் சுதந்திரமாக இருப்பதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்று சீனா எச்சரித்துள்ளது. தைவானைச் சுற்றித் தான் மேற்கொண்ட மூன்று நாள் ராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சீனா இவ்வாறு கூறியது.

"தைவான் நீரிணையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கட்டிக்காப்பதற்கு, சுதந்தரம் பெற தைவான் கடைப்பிடிக்கும் எல்லா வகையான பிரிவினைவாதப் போக்குகளையும் நாங்கள் எதிர்க்கவேண்டும்," என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்தார். தைவானை ராணுவ ரீதியாக முற்றுகையிடும் பயிற்சிகளை சீனா மேற்கொண்டது. அது உட்பட தான் மேற்கொண்ட எல்லாப் பயிற்சிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததென்றும் பல்வேறு பிரிவுகளின் ஆற்றல் முழுமையாகச் சோதிக்கப்பட்டதென்றும் சீனாவின் ராணுவம் கூறியது.

தைவான் அதிபர் சாய் இங்-வென், அண்மையில் அமெரிக்காவில் அந்நாட்டின் நாடாளுமன்ற நாயகர் கெவின் மெக்கார்த்தியைச் சந்தித்த பிறகு தைவான் சுற்றுப்புறத்தில் மூன்று நாள் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக சீனா அறிவித்தது.

முன்னதாக அமெரிக்க நாடாளுமன்ற நாயகராகப் பதவி வகித்த நேன்சி பெலோசி சென்ற ஆண்டு தைவானுக்குப் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தைவான் சுற்றுப்புறத்தில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது.

இம்முறை சீனா மேற்கொண்ட பயிற்சிகளிலும் கிட்டத்தட்ட அதே அளவு வீரியம் இருந்ததாக தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ, புளூம்பர்க் செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற நேர்காணலில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்