பெய்ஜிங்: சீனா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீதான வரிவிதிப்பை அமெரிக்கா ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சீனா குரல் எழுப்பியுள்ளது.
அவ்வாறு நேர்ந்தால் வர்த்தகப் போர் மீண்டும் வெடிக்கும் என்று அது தெரிவித்தது.
சீனாவை விநியோகச் சங்கிலியிலிருந்து விலக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நாடுகளுக்கு எதிராகப் பதிலடி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை சீனா எச்சரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வர்த்தகக் கட்டமைப்புக்கு அமெரிக்காவும் சீனாவும் இணங்கின.
இதன்மூலம் வர்த்தகப் போர் சற்று தளர்ந்துள்ளது.
ஆனால் இந்நிலை நீடிக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வர்த்தகக் கட்டமைப்பு தொடர்பான விவரங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூலை 7) வரிவிதிப்பு தொடர்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் பேசினார். ஆகஸ்ட் 1லிருந்து அமெரிக்க வரிவிதிப்பு உயரும் என்று வர்த்தகப் பங்காளிகளிடம் அவர் தெரிவித்தார்.
வரிவிதிப்பு குறித்து அதிபர் டிரம்ப் முதன்முதலாக ஏப்ரலில் அறிவித்தபோது உலகெங்கும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டன. பல நாடுகள் அக்கறை தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரிவிதிப்பு விகிதம் குறித்து முடிவெடுக்க பெரும்பாலான நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் கால அவகாசம் வழங்கினார்.
இதற்கு முன்பு 10% வரிவிதிப்பு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. மற்றவை ஒத்திவைக்கப்பட்டன.
சீனாவுக்கு முதலில் 100 விழுக்காட்டுக்கும் அதிகமான வரி விதிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் கலந்துரையாடி வரிவிதிப்பு தொடர்பான உடன்படிக்கையை எட்ட அதற்கு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் மே மாதத்திலும் அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி பதிலடி வரி விதித்தன. எனவே, இந்தக் கூடுதல் வரிகள் நடப்புக்கு வராதிருக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்துரையாடலும் ஒத்துழைப்பும் சரியான பாதை என சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்து.

