பிலிப்பீன்சுடனான மோதலில் ‘எளிதில் வெல்வோம்’: சீனா

பிலிப்பீன்சுடனான மோதலில் ‘எளிதில் வெல்வோம்’: சீனா

காணொளிப் படம்: ஏஎஃப்பி

16 Oct 2026 - 12:31 pm

1 mins read

மணிலா: பிலிப்பீன்சுடன் மோதல் ஏற்பட்டால் அதில் சீனா எளிதில் வென்றுவிடும் என்று பிலிப்பீன்சுக்கான சீனத் தூதர் கூறியுள்ளார்.

எனினும், தாங்கள் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றப்போவதில்லை என்றும் சீனத் தரப்பு சொன்னது. இதை, நாசுக்காக விடுக்கப்படும் மிரட்டலாக பிலிப்பீன்ஸ் பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சீனக் கடலின் பெரும்பாலான பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. அதைச் சட்டரீதியாக நியாயப்படுத்த முடியாது என்று அனைத்துலகத் தரப்பிலிருந்து தீர்ப்பளிக்கப்பட்டபோதும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது.

அப்பகுதியில் அண்மைய ஆண்டுகளில் பிலிப்பீன்ஸ், சீனக் கப்பல்கள் தொடர் மோதலில் ஈடுபட்டுவருகின்றன. அத்தகைய சில சம்பவங்களில் கப்பல்கள் மோதிக்கொண்டதுடன் சிலருக்குக் காயம் ஏற்பட நேரிட்டது.

சீனா, வட்டார அளவில் தொந்தரவு இழைக்கும் தரப்பு என்று பிலிப்பீன்சின் தற்காப்பு அமைச்சர் கில்பெர்ட்டோ டியோடொரோ சாடியிருந்தார். அதற்கு மறுநாள் சீனத் தூதர் ஜிங் குவானின் இக்கருத்துகள் வெளிவந்துள்ளன.

“வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தும் அணுகுமுறையைப் பின்பற்றினால் நாங்கள் எளிதில் வென்றுவிடுவோம். ஆனால், நாம் அவ்வாறு வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தமாட்டோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்,” என்று திரு ஜிங் குவான் மணிலாவில் ஒரு பள்ளியில் உரையாற்றும்போது சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்பிலிப்பீன்ஸ்சீனாதென்சீனக் கடல்பாதுகாப்புமிரட்டல்