சிட்னி: அமெரிக்காவுடனும் பிற நட்பு நாடுகளுடனும் தான் பெரிய அளவில் பங்கேற்கும் ராணுவப் பயிற்சிகளை சீனா உளவு பார்க்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தொடங்கும் வருடாந்தர ‘டேலிஸ்மன் சேபர்’ ராணுவப் பயிற்சியில், ஆஸ்திரேலியா தொடங்கி பாப்புவா நியூ கினி வரை 19 நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
பயிற்சி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தமது ஆறு நாள் சீன வருகையைத் தொடங்கினார்.
ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாழ்பட்ட உறவை மீட்டெடுக்கும் முயற்சியாக அவரது அந்தப் பயணம் அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அரசாங்க ஊடகமான ‘ஏபிசி’க்கு ஆஸ்திரேலிய தற்காப்புத் துறை மற்றும் பசிபிக் தீவு விவகார அமைச்சர் பேட் கான்ராய் பேட்டி அளித்தார்.
“சீனா கடந்த 2017 முதல் ‘டேலிஸ்மன் சேபர்’ ராணுவப் பயிற்சியைக் கண்காணித்து வருகிறது. இந்த ஆண்டு அது கண்காணிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
“பயிற்சியைக் கண்காணிக்கும் சீன ராணுவத்தின் நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா அருகிலான அதன் நடமாட்டத்தையும் ஆஸ்திரேலியா உற்று நோக்கும்,” என்று அவர் கூறினார்.