பெய்ஜிங்: சீனாவை அமெரிக்கா நசுக்க முயன்றால் இறுதிவரை அதனுடன் போராடுவோம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.
தெற்கு ஜெர்மனியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) நடைபெற்ற 61வது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், “வாஷிங்டனுடன் பெய்ஜிங் மோத விரும்பவில்லை.
“இருப்பினும், தன்னிச்சையான அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியாகப் பதிலளிக்கும். அதனை மனதில் வைத்து அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
மோதல் போக்கை விரும்பாத நிலையிலும் சீனாவை நசுக்குவதிலேயே குறியாக இருந்தால், அதனை எதிர்த்து இறுதிவரை சீனா போராடும் என்றும் திரு வாங் தமது உரையில் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் 20ஆம் தேதி அதிபர் பொறுப்பை ஏற்ற டோனல்ட் டிரம்ப், இம்மாதத் தொடக்கத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது 10 விழுக்காடு கூடுதல் வரியை அறிவித்தார்.
இந்நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தாம் தொலைபேசிவழி உரையாடியதாக பிப்ரவரி 10ஆம் தேதி ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கியபோது திரு டிரம்ப் கூறினார்.
இருப்பினும், என்ன பேசினார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.