மியன்மாரின் பாதுகாப்புக்கு சீனா ஆதரவளிக்கும்: வாங் யி உறுதி

மியன்மாரின் பாதுகாப்புக்கு சீனா ஆதரவளிக்கும்: வாங் யி உறுதி

படம்: இபிஏ

26 Apr 2026 - 2:25 pm

2 mins read

பெய்ஜிங்: மியன்மாரின் ராணுவத் தலைவராக இருந்து பின்னர் அதிபராக பொறுப்பு ஏற்றுள்ள மின் ஆங் ஹிலெய்ங்குக்கு சீனாவின் ஆதரவை சிறப்புத் தூதர் வாங் யி உறுதி செய்துள்ளார்.

மியன்மாரில் நடைபெற்ற சந்திப்பில் மியன்மாரின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் சீனா உறுதியான ஆதரவை வழங்கும் என்று வாங் யி சொன்னார்.

இவ்வாரம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மூன்று நாடுகளுக்கு வாங் யி பயணம் மேற்கொண்டார். கம்போடியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகள் அவை.

ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் உறவுகளை வலுப்படுத்துவதும் அமெரிக்காவுக்கு மாற்றாக சீனாவை நிலை நிறுத்துவதும் அவரது பயணத்தின் நோக்கமாகும்.

“மியன்மார் அதன் தேசிய நலன்களுக்கு ஏற்ப, அதன் மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையை உருவாக்குவதற்கு பெய்ஜிங் ஆதரவளிக்கும்,” என்று, தலைநகர் நேப்பிடாவிற்கு வருகையளித்தபோது திரு. வாங், திரு. ஆங் ஹிலெய்ங்கிடம் தெரிவித்ததாக ஏப்ரல் 25ஆம் தேதி பிற்பகுதியில் வெளியிடப்பட்ட சீன வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.

“இவ்வாண்டு புதிய மியன்மார் அரசாங்கத்தின் முதல் ஆண்டைக் குறிப்பதால், இரு தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்லவும் மேம்படுத்தவும், இருதரப்பு உறவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்,” என்றும் திரு. வாங் வலியுறுத்தினார்.

திரு. ஆங் ஹிலெய்ங் ஏப்ரல் மாதம் அதிபராகப் பதவியேற்றார். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஒரு குடிமக்களுக்கான பதவியில் தனது ஆட்சியைத் தொடர்கிறார்.

அவர் பதவியேற்ற விழாவில், சீனா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ராணுவ ஆட்சிக்குழுவின் ஆதரவுடன் நடந்த தேர்தலுக்கு சீனாவே மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாமியன்மார்தூதர்