பெய்ஜிங்: சீனாவில் இவ்வாண்டில் இதற்குமுன் இல்லாத வகையில் இளையரிடையே வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 18.8 விழுக்காடாக அதிகரித்தது.
இப்போது கல்வி கற்காத, 16 முதல் 24 வயதிற்குட்பட்டோர் இடையே ஜூலை மாதத்தில் 17.1 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் ஆகஸ்ட்டில் உயர்ந்துவிட்டது.
கடந்த ஆண்டு ஜூனில் அவ்விகிதம் 21.3 விழுக்காடாக இருந்தது.
இவ்வாண்டு ஜூலையில் 6.5 விழுக்காடாக இருந்த 25-29 வயதுப் பிரிவினர்க்கான வேலையின்மை விகிதம், ஆகஸ்ட்டில் 6.9 விழுக்காடாக உயர்ந்தது.
தேசியப் புள்ளியியல் துறை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிட்ட வேலைவாய்ப்பு குறித்த தரவுகளில் இந்தப் புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் சீனாவில் கிட்டத்தட்ட 12 மில்லியன் பேர் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் வேலைச் சந்தையில் இது மேலும் போட்டியை அதிகரிக்கிறது.
முன்னதாக, இளையர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்திருந்தார்.

