பெய்ஜிங்: 2024 ஆண்டு முழுமைக்குமான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ 5 விழுக்காட்டுக்கு விரிவடைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்து உள்ளார்.
அந்த விகிதம் அரசாங்க வகுத்த இலக்கை நெருங்கியதாக அவர் தமது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சீனாவின் பொருளியல் நிலையாகவும் முன்னேற்றத்துடனும் நீடித்ததாக ஜனவரி 1அன்று திரு ஸி கூறினார்.
அதிபரின் புத்தாண்டுச் செய்தி அரசாங்க செய்தி நிறுவனமான ஸின்ஹுவா வெளியிட்டு உள்ளது.
“நாட்டின் வேலை நிலவரமும் விலைவாசியும் கட்டுக்குள் உள்ளன. முக்கிய அம்சங்களில் நிலவிய சிக்கல்கள் தீர்க்கப்பட்டுவிட்டன,” என்று திரு ஸி கூறி உள்ளார்.
பொருளியல் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் தொடரும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
சீனா கடந்த ஆண்டு எட்டிய வளர்ச்சி விகிதத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம்தான் தெரிய வரும்.
இருப்பினும், 2024ஆம் ஆண்டின் நிலவரம் மேம்பட்டதாகத் தோன்றுகிறது. 2023 செப்டம்பர் மாதம் சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஏராளமான ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது அதற்குப் பலனளித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதன் அடிப்படையில், 2024ஆம் ஆண்டின் வளர்ச்சி 4.8 விழுக்காடு என்று பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்து உள்ளனர்.

