தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள தீவை உளவு பார்த்த சீன ஆளில்லா வானூர்தி

2 mins read
717e2c8f-7a32-44cc-9e23-5a0e55b82a17
சீன (இடது) தேசியக் கொடியுடன் தைவானின் தேசியக் கொடி. இது ஓர் மாதிரி வரைபடம். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: சீனாவின் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்), தனது கட்டுப்பாட்டில் உள்ள பிராடாஸ் தீவை உளவு பார்த்ததாகத் தைவான் சனிக்கிழமை (ஜனவரி 17) குற்றஞ்சாட்டியுள்ளது.

தென் சீனக் கடலில் தைவானுக்கும் ஹாங்காங்குக்கும் இடையே தனிப்பட்டு அமைந்துள்ள அத்தீவில் சிறிய அளவிலான ராணுவ அமைப்புகள் தற்காப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளன. தைவானில் இருந்து தெற்குத் திசையில் 400 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அத்தீவு, தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வட்டார அமைதியையும் நிலைத்தன்மையையும் வெகுவாகப் பாதிக்கும் பொறுப்பற்ற கோபமூட்டும் செயலாக சீனாவின் நடவடிக்கையை தைவானின் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனநாயக முறையில் இயங்கும் தைவானை தனது மாநிலங்களில் ஒன்றாக உரிமை கொண்டாடும் சீனா, கிட்டத்தட்ட அன்றாடம் அந்நாட்டு எல்லைகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் நிலைப்பாட்டை தைவான் முற்றிலுமாக நிராகரித்து வருகிறது.

சீன உளவு வானூர்தி, சனிக்கிழமை அதிகாலையில் பிராடாஸ் தீவை நெருங்கியதாக தைவான் தற்காப்பு அமைச்சு கூறியது. அது ஏறத்தாழ எட்டு நிமிடங்கள் பிராடாஸ் வான் எல்லைக்குள் நுழைந்து பறந்துகொண்டிருந்தது.

உடனே எச்சரிக்கைச் செய்திகளை அனைத்துலக ராணுவப் பங்காளிகளுக்கு தைவான் அனுப்பியுள்ளது. எனவே காலை 5.48 மணிக்கு ஆளில்லா வானூர்தி பிராடாஸ் தீவின் வான் எல்லையிலிருந்து வெளியேறி விட்டதாக அமைச்சு ஓர் அறிக்கையில் விவரித்தது.

தைவானின் ராணுவம் விழிப்போடு நிலைமையை கண்காணித்து, உரிய முறையில் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தற்காப்பு அமைச்சு உறுதிசெய்தது.

வார இறுதி காரணமாக சீனாவின் தற்காப்பு அமைச்சை ஊடகங்கள் தொடர்புகொள்ள முடியவில்லை.

குறிப்புச் சொற்கள்