ஷென்ஸென்: சீனாவின் பொருளியல் வளர்ச்சி 3வது காலாண்டில் மேலும் மெதுவடைந்தது. இருந்தாலும் அது, சந்தை எதிர்பார்ப்பையும் விஞ்சி வளர்ச்சி கண்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3வது காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 4.6 விழுக்காடு விரிவடைந்துள்ளதை சனிக்கிழமை (அக்டோபர் 19) வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2024ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் வளர்ச்சி 4.6 விழுக்காடாக இருந்தது. இதிலிருந்து 3வது காலாண்டில் வளர்ச்சி மேலும் குறைந்துள்ளது. இது, ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்த வளர்ச்சியாகும்.
அப்படியிருந்தாலும் ராய்ட்டர்ஸ் ஆய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்திருந்த 4.5 விழுக்காடு வளர்ச்சியை இது விஞ்சியிருக்கிறது. தொழிற்சாலை உற்பத்தி, சில்லறை விற்பனை, சொத்து முதலீடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நல்ல முன்னேற்றமே இதற்கு காரணம்.
பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய புள்ளியியல் துறை துணை ஆணையர் ஷெங் லாய்யூன், உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் நாடான சீனாவின் பொருளியல் நிலைபெற்று முன்னேறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறினார்.
ஆனாலும் இது, ஆரம்பகாலக் கணிப்பு என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
பொருளியல் மீள்வதற்கான அடித்தளங்கள் இன்னும் வலுவாக இல்லை என்ற அவர், பொருளியலை முன்னேற்றும் கொள்கைகளை விரைவுபடுத்த மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
செம்பம்பர் மாதம் முதல், சரிந்துவரும் பொருளியலை தூக்கி நிறுத்துவதற்காக சீனாவின் கொள்கை வகுப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 2024ஆம் ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய இலக்காகும்.

