ஸுஹாய் (சீனா): சீனாவின் ஸுஹாய் (Zhuhai) நகரில் 62 வயது ஆடவர் ஒருவர் காரை கூட்டத்தின் மீது ஓட்டியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 43 பேர் காயமுற்றனர். அந்நகரில் உள்ள விளையாட்டு நிலையம் ஒன்றுக்கு வெளியே இருந்த மக்கள் மீது அந்த ஆடவர் காரைச் செலுத்தித் தாக்கினார்.
திங்கட்கிழமை (நவம்பர் 11) மாலை 7.48 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து அதிகாரபூர்வமான தகவல்களை வெளியிட அந்நாட்டு அதிகாரிகள் கிட்டத்தட்ட 24 மணிநேரம் எடுத்துக்கொண்டனர்.
காயமுற்றோருக்கு சிகிச்சை அளிக்குமாறும் அச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்குமாறும் சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் லீ சியாங் இருவரும் வலியுறுத்தியிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 12) வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
திங்கட்கிழமை பின்னேரத்தில் ஸுஹாய் காவல்துறையினர் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டனர். கூட்டத்தின் மீது காரை மோதிய பிறகு ஆடவர் தப்பியோட முயன்றதாகவும் அவர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஃபான் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட அந்த ஆடவர் நடத்திய தாக்குதல், சீன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருநகரங்களில் கடுமையான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் பெய்ஜிங்கின் முன்னணி தொடக்கப் பள்ளிகளில் ஒன்றுக்கு வெளியே நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஐவர் காயமுற்றனர். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, ஷென்ஸனில் தனது பள்ளிக்கு வெளியே கத்திக்குத்துக்கு ஆளான ஜப்பானிய மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.