பெய்ஜிங்: தங்களின் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத் தளம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும் கட்டத்துக்கு வந்துவிட்டதாக சீனாவின் டிராம் சில்லு உற்பத்தி நிறுவனமான (DRAM chipmaker) சிஎக்ஸ்எம்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்தது.
உலகச் சந்தையில் கூடுதல் போட்டி தர நோக்கம்
அதன் மூலம் உலக கணினிமுறை சில்லுச் (memory chips) சந்தையில் சம்சுங் இலெக்டிரோனிக்ஸ், எஸ்கே ஹைனிக்ஸ், மைக்ரோன் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களுக்குப் போட்டி தரக்கூடிய மேலும் வலுவான நிறுவனத்தைச் சீனா அமைப்பது சாத்தியமாகக்கூடும் என்று நம்பப்படுகிறது. டிராம் என்பது கைப்பேசிகள், கணினிகள் உள்ளிட்ட பொருள்களில் தகவல் சேகரிப்புச் செயல்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் சில்லு முறையாகும்.
குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும், மேலும் சக்திவாய்ந்த கணினிமுறை சில்லுகளைக் குறைந்த விலையில் தயாரிப்பது புதிய தளத்தின் இலக்காகும். இந்நடவடிக்கையின் மூலம் கைப்பேசிகள் உள்ளிட்ட சாதனங்களுக்குப் பயன்படுத்த உற்பத்தியாளர்களுக்குக் கூடுதல் சில்லுகள் இருக்கும் என்று சிஎக்ஸ்எம்டி தெரிவித்தது. அந்நிறுவனம், அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான ஷங்காய் ஸ்டார் மார்க்கெட் பங்குச்சந்தையில் இவ்வாண்டு இடம்பெற்றது.
கூடுதல் கொள்ளளவு
தரவுகளை மேலும் ‘நெருக்கமாக’ சேகரித்து வைக்க வகைசெய்யும் சிறிய கட்டமைப்பைப் புதிய தளம் கொண்டுள்ளதாக சீனாவின் முன்னணி டிராம் உற்பத்தி நிறுவனமான சிஎக்ஸ்எம்டி கூறியது. அதனால் ஒவ்வொரு சில்லிலும் கூடுதல் கணினிமுறை கொள்ளளவு (memory) இருக்கும் என்றும் அத்தகைய சில்லுகளைக் கூடுதல் எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்களின் தயாரிப்பு ஆற்றல், பெரிய அளவில் உற்பத்தி செய்வதைப் பொறுத்தவரை இத்துறையில் காணப்படும் அதிநவீன முறைகளுக்கு ஈடாக இருக்கிறது என்று சிஎக்ஸ்எம்டி இணைத் தலைவரும் அந்நிறுவனத்தின் விளம்பர நிலையத் தலைவருமான லுவோ சியாடோங் தெரிவித்தார். சீனாவின் ஹெஃபெய் நகரில் நடைபெறும் உலக உற்பத்தி மாநாட்டில் அவர் பேசினார்.
சிஎக்ஸ்எம்டி, ஹெஃபெயில்தான் அதன் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
இரண்டு புதிய சில்லுகள்
இந்நிலையில், புதிய தளத்தில் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய 24 கிகாபைட் கொள்ளளவைக் கொண்ட சில்லுகளை சிஎக்ஸ்எம்டி வெளியிட்டது. மின்சாரத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் அச்சில்லுகள் பெரும்பாலும் கைப்பேசிகளிலும் எளிதில் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படக்கூடிய மின்சாரப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுபவை.
