பசிபிக்கில் சீனாவின் அறிவிக்கப்படாத ராணுவப் பயிற்சி

பசிபிக்கில் சீனாவின் அறிவிக்கப்படாத ராணுவப் பயிற்சி

இது தைவானை நாசுக்காக மிரட்டும் செயலாகப் பார்க்கப்படுகிறது
படம்: டிடி நியூஸ்

13 Nov 2026 - 4:07 pm

2 mins read

தைப்பே: மேற்குப் பசிபிக் வட்டாரத்திலும் தைவானைச் சுற்றியும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் சீனா அறிவிக்கப்படாத, பெரிய அளவிலான ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நடவடிக்கை, முக்கிய அனைத்துலகச் சந்திப்புகளை முன்னிட்டுத் தைவானையும் மற்ற அரசாங்கங்களையும் மறைமுகமாக மிரட்டும் செயல் என்று தைவானிய அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள்

இம்மாதத் தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் சீனா அவ்வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கப்பல்களை ஈடுபடுத்தியிருந்ததாகத் தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மூத்த தைவானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்ற ராணுவங்கள், நகரங்கள் ஆகியவற்றின்மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்துவதற்கான பயிற்சிகள் உள்ளிட்டவற்றை சீனா நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானிய நகரங்களும் அத்தகைய நகரங்களில் அடங்கும்.

ஜஸ்டி‌ஷ் மி‌ஷன் 2025

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தைவானைக் குறிவைத்து சீனா, ‘ஜஸ்டிஸ் மி‌ஷன் 2025’ எனப்படும் அதிகாரபூர்வ ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. அப்பயிற்சிகளில் இடம்பெற்றதைவிட இம்முறை அதிகமான கடற்படைக் கப்பல்கள் பயிற்சியில் பங்கேற்றதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். சீனா இதுவரை ஆக அதிக அளவில் அளவில் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்திய பயிற்சிகளில் இதுவும் அடங்கும் என்றும் அவர் சுட்டினார்.

சீனா, தனக்குச் சொந்தமானது என்று உரிமை கொண்டாடும் தைவானுக்கு எதிராகக் கடந்த ஐந்தாண்டுகளாக ராணுவ ரீதியிலான நெருக்குதலை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து பூசல் வெடிக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கிடையே கவலை தொடர்கிறது.

ஸி ஜின்பிங்கின் உரை

தைவானைப் பற்றிய கொள்கை தொடர்பில் சீன அதிபர் ஸி ஜின்பிங் முக்கிய உரையாற்றியிருந்தார். அமைதியான முறையில் தைவானும் சீனாவும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார். எனினும், வலுக்கட்டாயமான முறைகளில் ஒன்றிணைப்பதைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

நவம்பர் தொடக்கத்தில் நடந்த பயிற்சியில் சீனக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மஞ்சள் கடலிலிருந்து சீனாவுக்குள் வெகு தூரம் செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பாய்ச்சியதாகத் தைவானிய அதிகாரி தெரிவித்தார். சீனாவின் பயிற்சி சூசகமாக நடத்தப்பட்ட பயிற்சி மட்டுமின்றி சூசகமாக மிரட்டும் செயலும்கூட என்று அவர் குறிப்பிட்டார்.

“இது, துப்பாக்கி முனை, வங்கி அதிகாரியை நோக்கித் திரும்பியிருக்கும் வகையில் அதைத் திருடன் ஆடைப் பையில் ஒளித்துக்கொள்வது போன்றதாகும். அச்செயலால் வங்கி அதிகாரி பயந்து பணத்தைத் தந்துவிடுவார். அதேவேளை, அபாய ஒலியும் ஒலிக்காது, பெரிய அளவில் காவல்துறை நடவடிக்கையும் இருக்காது,” என்று அவர் விளக்கினார்.

இதுகுறித்து சீனத் தற்காப்பு அமைச்சிடம் கேட்கப்பட்டதற்குக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்