கட்டுப்படுத்தப்பட்ட இணையத் தாக்குதல் சோதனைகளை நடத்திய சீன ‘ஏஐ’ மாதிரி

கட்டுப்படுத்தப்பட்ட இணையத் தாக்குதல் சோதனைகளை நடத்திய சீன ‘ஏஐ’ மாதிரி

படம்: ராய்ட்டர்ஸ்

29 Oct 2026 - 6:23 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த ‘ஸெட்.ஏஐ’ நிறுவனத்தின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரி, கட்டுப்படுத்தப்பட்ட சோதனைச் சூழல்களில் சிக்கலான இணையத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாகவும் தனியாக நடத்தப்பட்ட சோதனைகளில் அது தொடர்ந்து கட்டளைகளைப் புறக்கணித்துச் செயல்பட்டதாகவும் ‘இர்ரெகுலர்’ எனும் செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘ஜிஎல்எம்-5.3’ என்ற அந்த மாதிரி, 13 பல கட்ட இணையத் தாக்குதல் சூழல்களில் மூன்றில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது வெற்றிகரமாக ஊடுருவித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. வெளிப்படையாகப் பொதுப் பயன்பாட்டில் உள்ள ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியில் இத்தகைய உச்சநிலை செயல்பாட்டுத் திறன் பதிவாகியுள்ளது இதுவே முதன்முறை என்று இர்ரெகுலர் குறிப்பிட்டது.

இருப்பினும், இர்ரெகுலர் நடத்திய சோதனைகளில் முன்னணி அமெரிக்க செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் ஒப்பிடுகையில் ஜிஎல்எம்-5.3 இன்னமும் பின்தங்கியே உள்ளது.

எடுத்துக்காட்டாக, முற்றிலும் ஒரே மாதிரியான சோதனைகள் இல்லை என்ற போதிலும், தனியாக நடத்தப்பட்ட மதிப்பீட்டில் ‘ஓபன் ஏஐ’ நிறுவனத்தின் ‘ஜிபிடி-6 ஆஸ்ட்ரா’ மாதிரி 10 சோதனைச் சூழல்களில் ஒன்பதில் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளது.

திறன் வாய்ந்த நவீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், அதிநவீன இணையத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பத் தடைகளைக் குறைத்து எளிதாக்கி வருகின்றன என்ற கவலையை இந்த ஆய்வு முடிவுகள் வலுப்படுத்துகின்றன.

குறிப்பாக, ஜிஎல்எம்-5.3 போன்று பயனர்கள் சுயமாகப் பதிவிறக்கவும் மாற்றியமைக்கவும் தன்னிச்சையாக இயக்கவும் வழிவகுக்கும் ‘திறந்த எடைக் கட்டமைப்பு’ கொண்ட பல சீன செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் இந்த அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவுத் தொடக்க நிறுவனங்களில் ஒன்றான பெய்ஜிங்கைச் சேர்ந்த ஸெட்.ஏஐ, இது குறித்த கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை. அந்தப் பாவனைத் தாக்குதல்களின்போது, பாதுகாக்கப்பட்ட கணினிச் சேவைகளுக்குள் ஜிஎல்எம்-5.3 ஊடுருவியதுடன், கணினி கட்டமைப்புகளுக்குள் தடையின்றி நகர்வதற்கு மாற்று இணைப்புகளை ஏற்படுத்தியதாகவும் ஒரே நேரத்தில் பல கணினிகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை முன்னெடுத்ததாகவும் இர்ரெகுலர் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்