சீன அதிபர் ஸி ஜின்பிங், பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள அரசியல், பாதுகாப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்கவிருக்கிறார்.
மாநாட்டில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்வர் என்று பெய்ஜிங் தெரிவித்தது. சீனாவின் வட்டார ஆதிக்கத்தை வலியுறுத்தும் வகையில் மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு எனும் அந்த மாநாடு தியான்ஜின் நகரில் இம்மாதம் 31ஆம் தேதியும் செப்டம்பர் முதல் தேதியும் நடைபெறும். நாடுகளுக்கு இடையில் நிலவும் உறவுகளை வலுப்படுத்த மாநாட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. சீன வெளியுறவு உதவி அமைச்சர் லியு பின் செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்களை வெளியிட்டார்.
பெய்ஜிங் பல ஆண்டுகள் காணாத அளவுக்கு ஆகப் பெரிய ராணுவ அணிவகுப்பொன்றை நடத்தவிருப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பு அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வெளியுறவு, வர்த்தகக் கொள்கைகளால் முக்கிய வட்டார நாடுகள் சில சீனாவுடன் நெருக்கமாகச் செயல்பட முயல்கின்றன.
ஈரானிய அதிபர் மசூட் பெஸெஷ்கியான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலியோர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் திரு பின் சொன்னார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைத்துலக நிலவரம் மேலும் மேலும் கொந்தளிப்பாகவும் குழப்பமாகவும் உருவெடுக்கும்போது அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது இன்னும் இன்னும் முக்கியமாகிறது,” என்று திரு பின் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மாநாட்டின் முடிவில் தியான்ஜின் பிரகடனம் வெளியிடப்படும்.