பெய்ஜிங்: சீனாவில் மில்லியன் கணக்கான அரசு ஊழியர்களுக்கு அந்நாடு ஆச்சரியப்படும் வகையில் இவ்வாரம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மெதுவடைந்துவரும் பொருளியலுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் சீன மக்களின் வாங்கும் சக்தியை பெருக்கவும் அந்நாட்டு அரசு ஊதிய உயர்வு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் 48 மில்லியன் அரசு ஊழியர்கள் உள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்பொழுது, அவர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வு பொருளியலுக்கு அமெரிக்க டாலர் 12 பில்லியனிலிருந்து (S$16.5பி.) அமெரிக்க டாலர் 20 பில்லியன் அளவுக்கு முட்டுக்கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
சீனாவில் கடைசியாக நாடு தழுவிய ஊதிய உயர்வு 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது ஊழலை ஒழித்து, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் முயற்சியாக உள்ளூர் ஊழியர்களுக்கு 30 விழுக்காட்டுக்கும் அதிகமான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இது குறித்து அரசு சார்பாக வழக்கமாக கருத்துரைக்கும் அரசு மன்ற தகவல் அலுவலகத்தை (The State Council Information Office) தொடர்பு கொண்டபோது மன்றம் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இம்முறை, அரசு ஊழியர்களின் மாத ஊதியம் சராசரியாக அனைவருக்கும் கிட்டத்தட்ட 500 யுவான் (S$90)உயர்த்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டவர்கள், அல்லது சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிட்டவர்கள் ஆகியோர் மூலம் தெரியவந்துள்ளது.
சில இளம் அரசு ஊழியர்கள் தங்களது மாத ஊதியம் ஏறத்தாழ 300 யுவான் அதிகரித்ததாகக் கூறினர்.
இதில் பல அதிகாரிகள், பொதுத் துறை ஊழியர்கள் போன்றோரின் வருமான உயர்வு ஜூலை மாத பின்தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு போனஸ் போன்று ஒரு தொகுப்பாக வழங்கப்பட்டதாக இது பற்றி விவரமறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.