பறக்கும் கார்: 2027ல் விநியோகிக்கத் திட்டமிடும் சீன மின்வாகன நிறுவனம்

பறக்கும் கார்: 2027ல் விநியோகிக்கத் திட்டமிடும் சீன மின்வாகன நிறுவனம்

1 mins read
1905c5fe-c566-4b43-9eda-4eebb9b44ac8
ஏப்ரல் 15ஆம் தேதி ஹாங்காங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட ‘எக்ஸ்பெங்’ நிறுவனப் பறக்கும் காரின் மாதிரி வடிவம். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் மின்வாகனத் தயாரிப்பாளரான எக்ஸ்பெங் நிறுவனம் அதன் பறக்கும் கார்களின் உற்பத்தியை 2027ஆம் ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் பிரையன் கூ வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெர்மனியின் புகழ்பெற்ற வாகன உற்பத்தியாளரான வொக்ஸ்வேகன் நிறுவனத்துடனான ஒத்துழைப்பை அதிகரித்து, மின்வாகனத் தயாரிப்பை அதிகமாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றப் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அதன்வழியாக இரு நிறுவனங்களும் பலன் அடையும்,” என்று திரு கூ கூறினார். வாகனத் தயாரிப்பில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களுடனும் பங்காளித்துவத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பறக்கும் கார்கள் தொடர்பில் இதுவரை எக்ஸ்பெங் நிறுவனம் 7,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சீனாவில் செய்யப்பட்டன. சீன விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற எக்ஸ்பெங் காத்திருப்பதாகவும் திரு கூ தெரிவித்தார்.

இவ்வாண்டு இறுதியில் தென்சீன நகரான குவாங்சூவில் ஓட்டுநரில்லா மின்டாக்சிகளைச் சோதிக்கும் பணி தொடங்கவுள்ளதாக அவர் கூறினார்.

அதோடு 2027ஆம் ஆண்டு முழுவதும் உலகின் பல பகுதிகளில் வர்த்தகப் பங்காளிகளுடன் பல சோதனைகள் இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்