பெய்ஜிங்: சீன அரசாங்க ஊழியர்கள் சிலருக்கு, மூன்று பேருக்குமேல் குழுவாக வெளியில் உணவருந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருந்துகளில் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் சிலர் உயிரிழந்ததை அடுத்து இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சமூக ஊடகப் பதிவுகள் கூறுகின்றன.
சீன அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள வேளையில் இத்தகவல் வெளியானது.
மறுஆய்வு செய்யப்பட்ட செலவுக் குறைப்புக் கட்டுப்பாடுகள் சென்ற மாதம் (மே) வெளியிடப்பட்டன. அவற்றின்கீழ், ஆடம்பர விருந்துகளில் கலந்துகொள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கும் பொதுச் சேவை ஊழியர்களுக்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக செலவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள், காரில் உபரியாகப் பொருத்தப்படும் ஆடம்பரக் கருவிகள், வேலை தொடர்பான கூட்டங்களில் அலங்காரச் செடிகள் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்படுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், விருந்துகளில் அளவுக்கதிகமாக மது அருந்திய பிறகு அதிகாரிகள் உயிரிழந்த மூன்று சம்பவங்கள் பரவலாக கவனத்தை ஈர்த்தன.
ஹுனான், அன்ஹுய், ஹெனான் வட்டாரங்களில் நிகழ்ந்த அந்த உயிரிழப்புகள் தொடர்பில் 20க்கு மேற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் அந்த விருந்துகள் தொடர்பான தகவல்களை மறைத்துவிட்டு, உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தனிப்பட்ட முறையில் இழப்பீடு வழங்க முயன்றது அதற்குக் காரணம்.