ஹாங்காங்: சீனாவில் கடந்த 2024ஆம் ஆண்டில் திருமண நிகழ்வுகளின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு சரிந்தது.
இதன் தொடர்பில் அந்நாட்டில் இதுவரை இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மக்கள்தொகை குறைந்து வருகிறது; அதைக் கையாள திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுகொள்ளுமாறு அதிகாரிகள், இளையர்களை ஊக்குவிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அப்படியிருந்தும் திருமண நிகழ்வுகளில் சரிவு காணப்பட்டுள்ளது.
சீனாவில் சென்ற ஆண்டு 6.1 மில்லியன் தம்பதியர் திருமணம் செய்துகொள்ளப் பதிவுசெய்தனர். அந்த எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டு 7.68 மில்லியனாகப் பதிவானது. சீனாவின் சிவில் விவகார அமைச்சின் புள்ளி விவரங்களில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.
குழந்தைப் பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்கு அதிக செலவாவதே சீனாவில் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவதில் ஆர்வம் குறைந்து வருவதற்கு முக்கியக் காரணம் எனப் பலகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.
அதோடு, கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பொருளியல் வளர்ச்சி சீராக இல்லை. அதனால் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது சவாலாக இருந்து வருகிறது, வேலை கிடைத்தவர்களிடம் நீண்டகாலத்தில் சிக்கல்கள் எழக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
சென்ற ஆண்டு சீனாவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான தம்பதிகள் விவாகரத்து செய்ய விண்ணப்பித்ததாகவும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை, 2023ல் பதிவானதைவிட 1.1 விழுக்காடு அதிகமாகும்.

