ஏற்ற துணைக்குத் திருமணத் தரகர்களை அதிகம் நாடும் சீனாவின் ஆண்கள்

ஏற்ற துணைக்குத் திருமணத் தரகர்களை அதிகம் நாடும் சீனாவின் ஆண்கள்

2 mins read
ed49a89e-c912-420a-a0ae-7c704ab76d41
சீனாவில் பெண்களைவிட 30 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர். - படம்: ஏஎஃப்பி

செங்டு: சீனாவில் பல ஆடவர் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடிப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

திருமணத்தை வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதும் சீனச் சமூகத்தில் திருமணப் பதிவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன. கடந்த ஆண்டு சீனாவில் மணமுடித்த தம்பதிகள் எண்ணிக்கை 6.76 மில்லியன்.

பத்தாண்டுக்குமுன் பதிவான எண்ணிக்கையில் அது பாதிக்கும் சற்று அதிகம்.

பல ஆண்டாகச் சீனாவில் தொடரும் ‘ஒற்றைப் பிள்ளை’ கொள்கை, ஆண்பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நீண்டகால எண்ணம் ஆகியவற்றால் சீனாவில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை 30 மில்லியன் கூடுதலாக உள்ளது.

அதன் காரணமாகப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள ஆண்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றனர். பலர் திருமணத் தரகர்களையும் நாடுகின்றனர்.

சீனாவில் உள்ள பல்வேறு நகரங்களில் 20, 30 வயதுகளில் உள்ள நிபுணர்கள் பலர் திருமணத் தரகர்களின் சேவையை நாடுகின்றனர் அல்லது உத்தேச வாழ்க்கைத் துணைகளைச் சந்திக்க இணையத்தளங்களில் இணைகின்றனர்.

பல இளம் ஆண்களுக்குப் போதுமான பெண்களைச் சந்திப்பது சவாலாக உள்ளது.

வேலையிடத்தில் அதிக நேரம் வேலை செய்யவேண்டிய நிலை உள்ளதால் ஒற்றையர்களுக்கு மற்றவர்களுடன் பழகுவதற்கான நேரம் குறைவாக இருப்பதாகத் திருமணத் தரகர்கள் குறிப்பிட்டனர்.

எனவே, இணையத் தரகர்கள் மூலம் பலரைச் சந்திக்க வாய்ப்பு கிடைப்பதாகச் சீனாவில் உள்ள ஆண்கள் பலர் கருதுகின்றனர்.

பெண்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருப்பதால் ஆண்களிடையே திருமணங்கள் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.

திருமணம் முடிக்கும் துணைகள் கார் வைத்திருக்கவேண்டும், சொந்த வீடு வைத்திருக்கவேண்டும், அந்த வீட்டில் குறைந்தது மூன்று படுக்கை அறைகள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைப் பல பெண்கள் வைத்துள்ளனர்.

இவற்றுடன் அரசாங்க நிறுவனத்தில் மாதம் 12,000 யுவென் சம்பளத்துடன் கூடிய வேலையில் ஆண்கள் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்