ஊழல் தொடர்பாக சீனத் தற்காப்பு அமைச்சர் விசாரிக்கப்படுவதாக தகவல்

2 mins read
e9d87744-f135-40ab-911c-519075bb3112
ஊழல் தொடர்பாக சீனாவில் விசாரிக்கப்பட்டு வரும் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன். ஊழல் குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் தற்போதைய, முந்தைய அமைச்சர்களில் மூன்றாம் நபர் திரு டோங். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீன ராணுவத்தில் பரந்த அளவிலான ஊழல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது உயர்மட்டத்தையும் எட்டியுள்ள நிலையில், தற்பொழுது சீனத் தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று புதன்கிழமை (நவம்பர் 27ஆம் தேதி) பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

தொடர்ச்சியாக ஊழல் குறித்து விசாரணையை எதிர்கொள்ளும் தற்போதைய, முந்தைய அமைச்சர்களில் மூன்றாம் நபர் திரு டோங் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனக் கேள்விகளுக்கு சீன வெளியுறவு, தற்காப்பு அமைச்சுகள் உடனடியாக கருத்துரைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சீன ராணுவத்தில் 2023ஆம் ஆண்டிலிருந்து ஊழலுக்கு எதிராக பரந்த அளவிலான களையெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி, ஒன்பது ராணுவ ஜெனரல்களுடன் குறைந்தது நான்கு தற்காப்பு துறை ஆகாயவெளி நிர்வாகிகள் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லாவோசில் சென்ற வாரம் நடைபெற்ற உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு டோங் பங்கேற்றார். அப்பொழுது அமெரிக்க தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை அவர் சந்திக்க மறுத்தார் என்று கூறப்படுகிறது. இதற்கு விளக்கமளித்த சீனா, சந்திப்பு ஏற்படாததற்கு அமெரிக்காவே காரணம் எனக் கூறியது. சீனாவின் முக்கிய நலன்களை அது மதிக்க வேண்டும் என்றும் தைவான் தொடர்பாக அது உடனடியாக தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது.

சீனாவின் முந்தைய தற்காப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு ஏழு மாதங்களே தமது பதவியில் இருந்த நிலையில் அவர் திடுதிப்பென்று 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து திரு டோங் அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்