வடகொரியா சென்றடைந்தார் சீன அதிபர்

வடகொரியா சென்றடைந்தார் சீன அதிபர்

படம்: ராய்ட்டர்ஸ்

08 Jun 2026 - 5:44 pm

2 mins read

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங் வடகொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் திங்கட்கிழமையன்று (ஜூன் 8) வடகொரியா சென்றடைந்தார்.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் வடகொரியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக அதிபர் ஸி வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்குச் சென்றுள்ளார்.

பல அனைத்துலகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வடகொரியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் அதற்குத் தூதரக மற்றும் பொருளியல் ஆதரவை வழங்கும் முதன்மை நாடாகவும் சீனா திகழ்கிறது. வடகொரியாவின் அணுவாயுத விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் இருக்கும் சூழலில் இப்பயணம் இடம்பெற்றுள்ளது.

பியோங்யாங் விமான நிலையம் சென்றடைந்த அதிபர் ஸியை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், அவரது மனைவி ரி சோல் ஜூ ஆகியோர் நேரில் வரவேற்றனர். விமான நிலையத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர். அதிபர் ஸிக்கு ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக, வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவதே தங்களின் பொதுவான இலக்கு என்று சீனாவும் அமெரிக்காவும் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தன.

எனினும், அதிபர் ஸி வடகொரியா செல்வதற்குச் சற்று முன்பாகப் பேசிய கிம் ஜோங் உன்னின் சகோதரி, வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் பின்வாங்க முடியாததாகும் என்று திட்டவட்டமாகக் கூறினார். வடகொரியாவின் அணுவாயுதத் தயாரிப்பு தற்போதும் தொடர்ந்து வருவதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கவலை தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ‘ரோடோங் சின்முன்’ செய்தித்தாளின் முகப்புப் பக்கத்தில் சீன அதிபர் ஸி எழுதியுள்ள கட்டுரை வெளியிடப்பட்டது.

காலம் எவ்வளவு மாறினாலும் அல்லது அனைத்துலகச் சூழல் எவ்வாறு உருவெடுத்தாலும், சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை யாராலும் அழிக்க முடியாது என்று இரு நாடுகளுக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவை அவர் மீண்டும் அக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியாவை ஓர் அணுவாயுத நாடாகச் சீனா ஏற்றுக்கொண்டிருந்தாலும் வட்டார நாடுகளில் எவ்விதக் குழப்பமும் இன்றி நிலையான சூழல் நிலவ வேண்டும் என்பதையே அதிபர் ஸி வடகொரியத் தலைவரிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சீனாவடகொரியாஸி ஜின்பிங்பயணம்