வடகொரியாவுக்குச் சீன அதிபர் பயணம் மேற்கொள்ளக்கூடும்

வடகொரியாவுக்குச் சீன அதிபர் பயணம் மேற்கொள்ளக்கூடும்

படம்: ஏஎஃப்பி

21 May 2026 - 4:37 pm

2 mins read

சோல்: சீன அதிபர் ஸி ஜின்பிங் அடுத்த வாரமே வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று தென்கொரியாவின் ‘யோன்ஹாப்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய உயர் அரசு அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, சீனப் பாதுகாப்பு மற்றும் அதிகாரபூர்வத் தூதரகக் குழுவினர் அண்மையில் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்குச் சென்றிருந்தனர். இதன் அடிப்படையில், மே மாத இறுதியிலோ ஜூன் மாத தொடக்கத்திலோ அதிபர் ஸி வடகொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசிய சீன அதிபர் ஸி, இந்த வடகொரியப் பயணத்தின் மூலம் அதிபர் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே சமரசத் தூதராகச் செயல்பட முயல்வார் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அறிக்கை குறித்து தென்கொரிய வெளியுறவு அமைச்சு உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

வடகொரியாவின் மிக முக்கியப் பொருளியல் மற்றும் அரசியல் நட்பு நாடாக விளங்கும் சீனா, கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சற்றுத் தொய்வடைந்திருந்த உறவை மீண்டும் பலப்படுத்தத் தீவிரமாக முயன்று வருகிறது.

கடந்த 2025ஆம் ஆண்டு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட கிம் ஜோங் உன், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில் அதிபர் ஸி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் டிரம்ப் தமது முதல் பதவிக்காலத்தில் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த கிம் ஜோங் உன்னை மூன்று முறை சந்தித்திருந்தார். வடகொரியத் தலைவருடன் தமக்கு நல்ல உறவு இருப்பதாகவும் அவரை மீண்டும் சந்திக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்