பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 90 பேர் உயிரிழந்ததாக சின்ஹுவா அரசாங்க செய்தி நிறுவனம் சனிக்கிழமை (மே 23) தெரிவித்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் சீனாவின் தொழிற்பேட்டைகளில் ஏற்பட்ட ஆகப் பெரிய விபத்தாக அது கருதப்படுகிறது.
இம்மாதம் 22ஆம் தேதி, ஷான்சி மாநிலத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் இரவு 7.29 மணியளவில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அதையடுத்து, நிலக்கரிச் சுரங்கத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைக் காவல்துறை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
சம்பவம் நேர்ந்தபோது நிலத்தடிச் சுரங்கத்தில் மொத்தம் 247 ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களில் 201 பேர் சனிக்கிழமை காலை 6 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இருப்பினும், குறைந்தது 82 பேர் மாண்டதை சின்ஹுவா செய்தி நிறுவனம் பின்னர் உறுதிசெய்தது. சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 9 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சீனாவின் அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான சிசிடிவி வெளியிட்ட காணொளிகளில் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தூக்குப்படுக்கைகளைச் சுமந்துசெல்வதையும் ஆம்புலன்ஸ் அருகே நிற்பதையும் காண முடிந்தது.
இதற்கிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங், காயமடைந்தோருக்கு உடனடியாகச் சிகிச்சையளிக்கும்படியும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து வட்டாரங்களும் பிரிவுகளும் இந்த விபத்திலிருந்து பாடம் கற்கவேண்டும். வேலையிடப் பாதுகாப்புத் தொடர்பில் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். இத்தகைய பெரிய விபத்துகள் நேர்வதை முழுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று திரு ஸி கூறினார்.
நிலக்கரிச் சுரங்கத்தில் வெளியான கரிமவாயுவின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமாக இருந்ததை அடுத்து நால்வர் மாண்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.
சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட பலர் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதையும் அது சுட்டியது.


