டிரம்ப்பை வரவேற்ற சீன அதிபர் ஸி: முத்தரப்புச் சந்திப்பு எதிர்பார்ப்பு

டிரம்ப்பை வரவேற்ற சீன அதிபர் ஸி: முத்தரப்புச் சந்திப்பு எதிர்பார்ப்பு

படம்: ஏஎஃப்பி

18 Nov 2026 - 9:34 pm

2 mins read

ஷென்சென்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான முக்கியச் சந்திப்பிற்கு முன்னதாக, சீன அதிபர் ஸி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை புதன்கிழமை (நவம்பர் 18) சீன விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.

ஷென்சென்னில் உள்ள பாவோஆன் (Bao’an) அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய திரு டிரம்ப்பை அதிபர் ஸி ஆரத்தழுவி வரவேற்றார். கடந்த செப்டம்பரில் ‘ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்’ தளத்தில் அமெரிக்க அதிபர் அளித்த வரவேற்புக்குப் பதிலளிக்கும் வகையில் இது அமைந்தது.

“சீன-அமெரிக்க உறவுகள், ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு, உலகளாவிய சூழல் குறித்த முக்கிய விவகாரங்களில் ஆழமான கருத்துப் பரிமாற்றத்தை எதிர்நோக்குகிறேன். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே ஆக்ககரமான, உத்திசார் நிலையான உறவை முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன்,” என்று டிரம்ப்பிடம் ஸி கூறியதாகச் சீன அரசாங்கச் செய்தி ஊடகமான சின்ஹுவா தெரிவித்தது.

ஷென்சென்னில் உள்ள பாவோஆன் (Bao’an) அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய டிரம்ப்பை வரவேற்ற சீன அதிபர் ஸி.
ஷென்சென்னில் உள்ள பாவோஆன் (Bao’an) அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய டிரம்ப்பை வரவேற்ற சீன அதிபர் ஸி. - படம்: ராய்ட்டர்ஸ் (via REUTERS)

வியாழக்கிழமை (நவம்பர் 19) நடைபெறும் முத்தரப்புச் சந்திப்பில், கீவ், ஐரோப்பாவைத் தவிர்த்துவிட்டு உக்ரேன் விவகாரத்தில் இம்மூவரும் முடிவெடுக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரேன் குறித்துப் பேசப்படாது என வாஷிங்டன் முன்னர் கூறியிருந்தாலும், அது விவாதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த 21 பொருளியல் நாடுகளின் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு வருடாந்தரக் கூட்டத்தைச் சீனா ஏற்று நடத்துகிறது.

விமானத்திலிருந்து இறங்கிய டிரம்ப்பிற்கு இரு நாட்டு தேசிய கீதங்களுடனும், வானில் வண்ணப் புகைவிட்டபடி பறந்த போர் விமானங்களுடனும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக புதன்கிழமையன்று பேசிய புட்டின், 2022 உக்ரேன் படையெடுப்பால் விதிக்கப்பட்ட மேற்கத்தியத் தடைகள் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறினார். முத்தரப்பு உச்சநிலை மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிம் வருகிறாரா?

பிலிப்பீன்சில் ‘குவாட்’ தலைவர்களைச் சந்தித்த பிறகு டிரம்ப் சீனா வந்துள்ளார். ஷென்சென்னில் புட்டின், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் தனித்தனியே பேச விரும்புவதாக அவர் கூறினார். எனினும், கிம் உடனான சந்திப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்