வாஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் சீனா முறைகேடு செய்ததாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். அதிபர் டிரம்ப்பின் இந்தக் குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக அமைதியைச் சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், ரூபியோ இப்பயணம் திட்டமிட்டபடி தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
“அதிபர் ஸியின் அமெரிக்கப் பயணத்துக்குத் தயாராவதற்கு சீனா அதற்குத் தேவையான அதன் அதிகாரிகளை அமெரிக்காவுக்குத் தொடர்ந்து அனுப்பிவைப்பதாக அமைச்சர் ரூபியோ கூறினார்.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் பங்கெடுக்கப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னதாக அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை நிலைப்படுத்தவும் 2025ஆம் ஆண்டில் எட்டப்பட்ட வர்த்தக உடன்பாட்டைத் தடையின்றி பேணவும் சீன அதிபரின் இந்த அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவும் சீனாவும் இரு பெரும் வல்லரசு நாடுகள் என்பதால், அவற்றுக்கிடையே சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு என்றும் எனினும் இரு முக்கிய நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உறவைத் தற்காத்துக் கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் ரூபியோ செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார்.
அதிபர் ஸியின் அமெரிக்கப் பயணத்துக்கு முன்னதாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விசா, செயற்கை நுண்ணறிவு ஆகியவை தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சீன செய்தியாளர்களுக்கு எதிரான 90 நாள் விசா கட்டுப்பாட்டை அதிபர் டிரம்ப் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

