பெய்ஜிங்: சீனாவின் தேசிய ரயில்வே, நாட்டின் எட்டு நாள் தேசிய தின விடுமுறையின் முதல் நாளான புதன்கிழமை (அக்டோபர் 1), 23.13 மில்லியன் பயணங்களைப் பதிவுசெய்தது. இது, முந்தைய ஆண்டைவிட கிட்டத்தட்ட 8 விழுக்காடு அதிகம்.
மேலும், இது ஒரே நாளில் நிகழ்த்தப்பட்ட பயணங்களின் எண்ணிக்கையில் புதிய சாதனை என்று அரசாங்க ஊடகமான சிசிடிவி தெரிவித்தது.
ரயில்வே கட்டமைப்பில் வியாழக்கிழமை 19 மில்லியனுக்கும் அதிகமான பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிசிடிவி கூறியது. யாங்சு நதி டெல்டா ரயில்வே மட்டும் நான்கு மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 10 விழுக்காட்டுக்குமேல் அதிகம்.
அக்டோபர் 8ஆம் தேதி விடுமுறை முடிவடைந்த பிறகு, மொத்த பயணத் தரவை சீனக் கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனீட்டாளர் தேவை, சீனப் பொருளியலின் நிலை இவ்விரண்டின் ஒரு முக்கியக் குறியீடாக இந்தத் தரவு உள்ளது.
விடுமுறைக் காலத்தில் சீனா முழுவதும் ஏறக்குறைய 2.36 பில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சை சின்ஹுவா செய்தி நிறுவனம் மேற்கோள்காட்டியது.
அன்றாடச் சராசரிப் பயணங்கள் 295 மில்லியனாக இருக்கும் என்றும் இது 2024ன் இதே காலகட்டத்தைவிட 3.2 விழுக்காடு அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.