தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாளுக்கு இரண்டு மணி நேரம்: கைப்பேசிக்கு வரம்பு விதிக்கத் திட்டமிடும் நகரம்

2 mins read
c531131b-abc7-42ed-ac95-d57a3e0caf1c
ஜப்பானிய இளையர்கள் வார நாள்களில் நாளொன்றுக்குச் சராசரியாக ஐந்து மணி நேரத்திற்கும் சற்று அதிகமாகக் கைப்பேசி பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. - மாதிரிப்படம்: ஊடகம்

தோக்கியோ: ஒவ்வொரு நாளும் வேலை அல்லது பள்ளி நேரத்திற்குப் பின் இரண்டு மணி நேரத்திற்குமேல் கைப்பேசி பயன்படுத்த வேண்டாம் என்று ஜப்பானிய நகரம் ஒன்று குடியிருப்பாளர்களை வலியுறுத்தவிருக்கிறது.

அதற்காக அவசரச் சட்டம் ஒன்றையும் அது முன்மொழிந்துள்ளது.

ஆயினும், ஜப்பானின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள தோயோவாக்கே நகரவாசிகளை அவ்வரம்பு கட்டுப்படுத்தாது என்றும் மீறுவோர்க்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் அந்தச் சட்ட முன்வரைவு கூறுகிறது.

“உறக்கப் பிரச்சினை உட்பட பல்வேறு உடல், மனநலச் சிக்கல்களை ஏற்படுத்தவல்ல மிகைநேர திறன்கருவிகளின் பயன்பாட்டைத் தடுப்பதே அதன் நோக்கம்,” என்று தோயோவாக்கே நகர மேயர் மசஃபுமி கோக்கி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தார்.

தொடக்கப் பள்ளி மாணவர்கள் இரவு 9 மணிக்குப் பின்னரும் உயர்நிலை, உயர்கல்வி மாணவர்கள் இரவு 10 மணிக்குப் பின்னரும் கைப்பேசி பயன்படுத்த வேண்டாம் என்று அந்த அவசரச் சட்டம் வலியுறுத்துகிறது.

இத்திட்டத்திற்கு இணையவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“அவர்களது நோக்கம் புரிகிறது. ஆனால், இரண்டு மணி நேர வரம்பு என்பது சாத்தியமில்லை,” என்று எக்ஸ் பயனர் ஒருவர் தெரிவித்தார்.

“இரண்டு மணி நேரத்தில், கைப்பேசியில் நான் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியாது, ஒரு திரைப்படத்தைப் பார்க்க முடியாது,” என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை என்று தெளிவுடுத்தியுள்ள மேயர், கைப்பேசிகள் பயனுள்ளது, தவிர்க்க முடியாதது என்பதை வழிகாட்டி நெறிமுறைகள் ஒத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அந்த அவசரச் சட்டம் குறித்து அடுத்த வாரம் விவாதிக்கப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நடப்பிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய இளையர்கள் வார நாள்களில் நாளொன்றுக்குச் சராசரியாக ஐந்து மணி நேரத்திற்கும் சற்று அதிகமாகக் கைப்பேசி பயன்படுத்துகின்றனர் என்று கடந்த மாதம் வெளியான கருத்தாய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

குறிப்புச் சொற்கள்