அந்த்ரோப்பிக் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு நிறுவனம் அதன் தயாரிப்பான ‘கிளாட் ஏஐ’ செயலி ஆயுதத் தயாரிப்புக்கும், உளவு பார்ப்பதற்கும் மேலும் பல தவறான இணையத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அதன் விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அதன் கிளாட் செயலி பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை வெளியிட்ட அந்த்ரோப்பிக் நிறுவனம் மோசடிக் குற்றங்களிலும் அது உதவியுள்ளது என்று குறிப்பிட்டது.
அந்த்ரோப்பிக் அறிக்கையில் வெளியிடப்பட்ட குற்றங்களின் பட்டியலில் சீனாவை அடித்தளமாகக் கொண்ட பயனாளர்கள் தைவானுக்கு எதிரான மின்னியல் போர் வடிவமைப்புக்கு கிளாட் செயலியைப் பயன்படுத்தியதாக விளக்கியது.
அதன்படி வான்வழியான ஆகாயத் தற்காப்புக்குத் தேவையான மென்பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அதில் எதிரிகள் விமானங்களை அவர்களது கண்காணிப்பு இயந்திரங்களில் கண்டறியாதபடி செயல்படும் (ராடார் தடுப்பு) திறன்கள் மேம்படுத்தப்பட்டன.
தைவானின் 12 இலக்குகள் அந்த வடிவமைப்பில் குறிவைக்கப்பட்டன. பல ஏவுகணைத் தொகுப்புகளும் போர் விமானத் தளங்களும் பதுங்குக்குழி தளபத்தியங்களும் அவற்றுள் அடங்கும். அந்த விசாரணையில் சீன ஆய்வுக் கழகங்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாக அந்த்ரோப்பிக் தெரிவித்தது.
சீனாவின் மக்கள் விடுதலைப் படையின் (பிஎல்ஏ) போர் அறிவியல் கழகம் அவற்றில் உட்படும் என்று அது கூறியது. எனவே அந்த அமைப்பின் பயன்பாட்டுக் கணக்குகளை தாம் தடை செய்துள்ளதாக அந்த்ரோப் தெரிவித்தது.
அந்த்ரோப்பிக் நிறுவனத்தின் விசாரணை அறிக்கை குறித்து எந்த விவரமும் தமக்குத் தெரியாது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு கூறியது. செயற்கை நுண்ணறிவு நல்ல காரணங்களுக்காக மட்டும் மேம்படுத்தப்படவேண்டும் என்று கருத்துரைத்த சீன அமைச்சு உண்மைக்குப் புறம்பான அந்நாட்டுக்கு எதிரான கூற்றுகளை நிராகரிப்பதாகக் கூறியது.

