சிட்னி: கரப்பான்பூச்சிகளின் தொல்லையால் தூக்கத்தைத் தொலைத்த குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடாக 9,700 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நியூசிலாந்தில் நடந்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு வீட்டை 6 பேர் சேர்ந்த குழு வாடகைக்கு எடுத்தததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாடகைக்கு வரும் முன்னர் வீட்டு உரிமையாளரிடம் கரப்பான்பூச்சிகள் இருப்பதை அக்குழு சுட்டிக்காட்டியது. வீட்டு உரிமையாளரும் அவற்றை பூச்சி ஒழிப்பு நிறுவனத்தைக் கொண்டு சுத்தம் செய்து தருவதாக வாக்களித்தார்.
அதனைத் தொடர்ந்து, வாரம் 1,050 வெள்ளி என்று வாடகை நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், வீட்டு உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கரப்பான்பூச்சிகள் அதிகரித்ததால் வாடகைதாரர்கள் சில பூச்சி ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆயினும், கரப்பான்பூச்சிகள் ஒழியவில்லை.
சில நாள்களில் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்ததாகவும் அதனால் இரண்டு பாத்திரம் கழுவும் இயந்திரங்கள் சேதமடைந்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுபோக, வீட்டில் சமையல் அறையும் குளியல் அறையும் சேதமடைந்திருந்தன. இந்நிலையில், வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமாக திடீரென வாடகையை 200 வெள்ளி உயர்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, வாடகைதாரர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த அதிகாரிகள் வீட்டு உரிமையாளரின் தவறுகளைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் அவர் வாடகைதாரர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
வாடகைதாரர்கள் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அந்த வீட்டைவிட்டு வெளியேறினர்.