பொகோட்டா: கொலம்பியாவை மோசமான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியோரை உயிருடன் மீட்கும் முயற்சிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வாரம் பற்பல ஆண்டுகளில் காணப்படாத அளவில் மோசமான நிலநடுக்கம் கொலம்பியாவை உலுக்கியது. அதையடுத்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமற்போயினர்.
புதிய நம்பிக்கை
கொலம்பியாவின் மூன்றாவது ஆகப் பெரிய நகரான கலியில் இடிந்து விழுந்த வீடமைப்புக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள்ளிருந்து சத்தம் வருவதை வெள்ளிக்கிழமை காலை மீட்புப் பணியாளர்கள் கேட்டனர். அதைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருக்கும் சிலர் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
காணாமற்போனவர்களைக் கணக்கிடும் சோகமான நடவடிக்கையை மேற்கொள்ள அவசர நடவடிக்கை குழுத் தயாரான வேளையில் இந்த நம்பிக்கை பிறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏழு வாரங்களுக்கு முன்பு கொலம்பியாவின் வேறு பகுதியை நிலநடுக்கம் உலுக்கியது. அதற்குப் பிறகு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் 10 நாள்களுக்குப் பிறகும் சிலரை உயிருடன் மீட்டதாகத் தெரிவித்தனர். அதனால் தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாக அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அந்த மீட்புப் பணியாளர்கள் இப்போது பெரேரா நகரில் மீட்புப் பணிகளில் ஈடுபட அங்குச் சென்றுள்ளனர்.
உயிர்ச்சேதம், காயம்
கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 287 பேர் பலியானதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) தெரிவித்தனர். கிட்டத்தட்ட 400 பேரைக் காணவில்லை.
நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் மூன்றில் இரு பங்கினர் கலி, பரேரா நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் முக்கிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.
ரிக்டரில் 7.4 அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 7.30 மணிக்குப் பிறகு கொலம்பியாவை உலுக்கியது. சொக்கோ மாநிலத்தின் சான் ஹோசே டெல் பால்மார் நகரில் நிலநடுக்கம் தொடங்கியது.
பெரும் சேதம்
நிலநடுக்கத்தால் மேற்கு கொலம்பியாவில் அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்கள் இடிந்து விழுந்தன; வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் சேதமடைந்தன.
அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் பல அழிந்துபோயின. பலர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி ஒன்றைத் தவிர எல்லா கொலம்பிய விமான நிலையங்களிலும் செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின.


