பொகோட்டோ: கொலம்பிய அதிபர் கஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மிரட்டல்களைப் புறக்கணித்துள்ளார்.
திரு பெட்ரோவும் போதைப் பொருள் கடத்தல்காரர் என்று குறைகூறிய திரு டிரம்ப், வெனிசுவேலாவில் மேற்கொண்டதுபோல கொலம்பியாமீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றார்.
“தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் மோசமான நிலையில் உள்ளது. கொக்கேயின் போதைப் பொருளை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு விற்பனை செய்யும் நபரால் கொலம்பியா நிர்வகிக்கப்படுகிறது,” என்று திரு டிரம்ப் கூறினார்.
கொக்கெயின் ஆலையையும் கொக்கெயின் தொழிற்சாலைகளையும் திரு பெட்ரோ நடத்துவதாகக் கூறிய அவர், நீண்டகாலத்துக்கு அதை அவர் செய்யப்போவதில்லை என்றார்.
இத்தகைய குறைகூறல்களை மறுத்த திரு பெட்ரோ, நீதிமன்ற சான்றுகளில்கூட தமது பெயர் இடம்பெற்றதில்லை என்றார்.
தம்மைப் பற்றி அவதூறாகப் பேசுவதைத் திரு டிரம்ப் நிறுத்திக்கொள்ளும்படி எக்ஸ் தளத்தில் திரு பெட்ரோ பதிவிட்டார்.
சட்ட ரீதியான காரணங்கள் இல்லாமல் வெனிசுவேலாமீது தாக்குதல் நடத்தி திரு மதுரோவைச் சிறைபிடித்துச் சென்றதை திரு பெட்ரோ வன்மையாகக் கண்டித்தார்.
ஜனவரி 4ஆம் தேதி எக்ஸ் தளத்தில் ‘நண்பர்கள் குண்டு வீசமாட்டார்கள்,” என்று திரு பெட்ரோ பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க அதிபர் விடுத்த மிரட்டல்கள் ஏற்க முடியாதது என்றும் அமெரிக்க அதிபர் மரியாதை தரவேண்டும் என்றும் கொலம்பியாவின் வெளியுறவு அமைச்சு சொன்னது.
வட்டார அளவில் கொலம்பியாவும் அமெரிக்காவும் முக்கிய ராணுவ, பொருளியல் நட்பு நாடுகளாக இருந்தன. தற்போது அவற்றின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

