தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே பேருந்து சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

ஓட்டுநர்களுடன் பேசி தீர்வுகாண உறுதி: காஸ்வே லிங்க்

2 mins read
a2aec257-732b-4547-9207-992b4662a3d3
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பேருந்துச் சேவைகளை நிர்வகிக்கும் காஸ்வே லிங்க் நிறுவனம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பேருந்துச் சேவைகளை நிர்வகிக்கும் காஸ்வே லிங்க் நிறுவனம், தங்கள் குறைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளது.

சேவைகளை நடத்தும் ஹன்டல் இன்டா நிறுவனம், சம்பவத்தைக் கடுமையாகக் கருதுகிறது என்றும் வெளிப்படையான கலந்துரையாடல் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண உறுதியுடன் இருக்கிறது என்றும் சொன்னது.

“பாதுகாப்பான நம்பகமான பொதுப் போக்குவரத்துச் சேவைகளைச் சமூகத்துக்கு வழங்குவதில் பேருந்து ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,” என்று காஸ்வே லிங் அறிக்கை வெளியிட்டது.

நிலைமையைச் சரிசெய்து ஆக்ககரமான தீர்வை எட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் நிறுவனம் உறுதிகூறியது.

சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்ட நிறுவனம் பயணிகளின் பொறுமைக்கு நன்றி கூறியது.

இந்நிலையில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பேருந்துச் சேவைகள் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் பணிக்குத் திரும்பினர் என்று ஜோகூர் பொதுப் பணித்துறை, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புகள் குழுத் தலைவர் முகமது ஃபஸ்லி முகமது சாலே தெரிவித்தார்.

பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) உட்பட சிங்கப்பூருக்குச் சேவை வழங்கும் பல்வேறு முக்கிய நிலையங்களில் பேருந்துச் சேவைகள் வழக்கம்போல் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“நாள் முழுக்க நீடித்த போராட்டம் குறித்து ஓட்டுநர்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனப் பிரதிநிதிகளிடமும் பேச மாநில அரசாங்கமும் சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையமும் மேற்கொண்ட முயற்சிகளால் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பியது,” என்று திரு ஃபஸ்லி சொன்னார்.

இருப்பினும் ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான பேருந்து ஓட்டுநர்களுக்கும் அவர்களின் நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்வதால் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இப்போதைக்கு இருதரப்பும் கலந்துரையாடிவருவதால் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் நேற்று காலை 5 மணியிலிருந்து சிங்கப்பூருக்கு வரவேண்டிய நூற்றுக்கும் அதிகமான பேருந்துச் சேவைகள் முடங்கின. அதன் காரணமாக சிங்கப்பூரில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மலேசிய ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பிஎஸ்ஐ உள்ளிட்ட பல முக்கிய பேருந்து நிலையங்களில் மலேசியர்கள் பலரும் சிங்கப்பூருக்கு வரவிருந்தோரும் சிக்கிக்கொண்டனர். சிலர் இணைப்புப் பாலம் வழியாகச் சிங்கப்பூருக்கு நடந்துவந்தனர்.

பேருந்து ஓட்டுநர்களின் சம்பளக் குறைப்பாலும் கட்டாயப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்