இந்தோனீசிய ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

இந்தோனீசிய ரயில் விபத்தில் நால்வர் உயிரிழப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

05 Jan 2024 - 7:43 pm

2 mins read

பாண்டுங், இந்தோனீசியா: இந்தோனீசியாவில் ஜனவரி 5ஆம் தேதி நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச்சென்ற இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்தனர்.

குறைந்தது 22 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு ரயில்களின் முன்பெட்டிகள் சேதமடைந்தன. மற்ற ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.

கிட்டத்தட்ட 500 பயணிகள் ரயிலில் இருந்தார்கள் என்றும், இதுவரை பயணிகள் யாரும் உயிர் இழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்ட நால்வரும் ரயில் அதிகாரிகள்.

மேற்கு ஜாவாவில் உள்ள சிசாலெங்கா பகுதிக்கு அருகில் உள்ளூர் நேரப்படி காலை மணி 6.03க்கு விபத்து நேர்ந்ததாக ‘பிடி கேஏஐ’ ரயில் நிறுவனம் கூறியது. 287 பயணிகளை ஏற்றிச்சென்ற நகர ரயில் ஒன்றும், 191 பேருடன் சென்ற உள்ளூர் ரயில் ஒன்றும் மோதிக்கொண்டன.

“கேஏஐ மிகுந்த வருத்தத்துடன் உள்ளது. நான்கு ரயில் அதிகாரிகளின் மரணங்களுக்கு அது தனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது,” என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

காயமடைந்தோரின் எண்ணிக்கை குறித்து மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் 37 பேர் காயமடைந்திருப்பதாகக் கூறினர். இருப்பினும் ரயில் நிறுவனம் 22 பேர் காயமடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தோர் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் இப்ராஹிம் தொம்போ கூறினார்.

இருப்பினும் கூட்டு மீட்புக் குழு ஒன்று, விபத்தில் மாண்ட ரயில் அதிகாரி ஒருவரின் சடலத்தைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதன் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு குழுக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது.

“குறிப்பாக மேற்கு ஜாவாவில், ரயில் சேவைகளைப் பாதித்துள்ள இந்த விபத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அமைச்சின் பேச்சாளர் அடிட்டா இராவாத்தி கூறினார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்