மும்பை: ஏர் இந்தியா நிறுவனம், மத்திய கிழக்குப் போரால் விளைந்துள்ள தாக்கத்தைச் சமாளிக்க புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தவுள்ளது.
இந்தியாவின் தேசிய விமானமான அந்த நிறுவனத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 25.1 விழுக்காடு பங்குரிமை பெற்று அதன் இணை நிர்வாகியாக உள்ளது. 2025ஆம் ஆண்டு நடந்த கடும் விபத்துக்குப் பிறகு, ஏர் இந்தியா அதன் லாபத்தை சரிகட்ட சிரமப்பட்டு வருகிறது.
மத்திய கிழக்கில் நடந்துவரும் போர், ஏர் இந்தியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
எரிசக்தி விலையேற்றமும் தட்டுப்பாடும் நிர்வாகத்தைப் பெரிதும் பாதிப்பதால், அதன் தொழில்நுட்பம் சாரா ஊழியர்களுக்கு ஊதியமில்லாத் தற்காலிக விடுப்புகள், விமானப் பயணங்களைக் குறைத்தல் போன்ற செயல்பாடுகளை அந்நிறுவனம் முன்னெடுக்க விரும்புகிறது.
நிலைமை முன்னேறும் வரையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு இச்செயல்பாடுகள் நடப்பில் இருக்கும்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி
இந்த நிச்சயமற்ற சூழலில் அதன் நிர்வாகத்தைத் தலைமையேற்று வழிநடத்த புதிய தலைமை நிர்வாக அதிகாரியையும் அது தேடிவருகிறது. இந்த விவரங்கள் வியாழக்கிழமை (மே 7) நடந்த அதன் நிர்வாகப் பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் அறிந்தோர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து ஊழியர்களுக்கும் குறைவான போனஸ், துணைத் தலைவர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு ஊதியத்தில் கழிவு போன்ற நடவடிக்கைகளை இந்தியாவின் இரண்டாம் பெரிய விமான நிறுவனம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. விரைவில் இதன் விவரங்கள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளிடம் இருந்து எவ்விதக் கருத்தும் கிடைக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
நிதியாண்டின் நிலை
கடந்த நிதியாண்டை S$2.95 பில்லியன் (220 பில்லியன் ரூபாய்) நஷ்டத்தில் ஏர் இந்தியா மார்ச் மாதம் அறிவித்து முடித்தது. அது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் லாபத்தையும் பாதித்ததால், ஏர் இந்திய நிறுவன செயல்பாட்டில் அது அதிக கவனம் செலுத்திவருகிறது.

