தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசியான் இணையக் குற்ற செயற்குழுவை அமைக்கப் பரிசீலிக்கவேண்டும்: ஸாகித்

2 mins read
0f72996d-8c43-492e-aa4b-1af54aea3d80
இணையக் குற்றங்கள் புரிபவரின் மாதிரிப் படம். - படம்: michalsons.com / இணையம்

புத்ராஜெயா: அனைத்துலகக் காவல்துறையைப் போன்ற ஆசியான் வட்டாரத்துக்கென இணையக் குற்றங்களைத் தடுக்கும் செயற்குழு ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகம்மது ஸாகித் ஹமிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்துலகக் காவல்துறையின் அடிப்படைக் கட்டமைப்பை வழிகாட்டியாகக் கொண்டு ஆசியானாபோல் (Aseanapol) என்றழைக்கப்படும் ஆசியான் தேசிய காவல்துறைப் படைகளுக்கான தலைவர்கள் குழு அத்தகைய செயற்குழுவை அமைக்கலாம் என்றார் டாக்டர் ஸாகித். உலகளவில் சீராக இயங்கும் பாதுகாப்புக் கட்டமைப்புக்கு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள், பொதுமக்கள் சுதந்திரம் ஆகிய இரு அம்சங்களுக்கும் போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டதாக தி ஸ்டார் போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.

மலேசியாவின் புத்ராஜெயா நகரில் உள்ள புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு நிலையத்தில் நடைபெறும் ஆசிய அனைத்துலகப் பாதுகாப்பு மாநாடு, கண்காட்சி 2025 (AiSSE25) நிகழ்ச்சியைத் திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தொடங்கி வைத்த பிறகு டாக்டர் ஸாகித் செய்தியாளர்களிடம் பேசினார்.

“குற்றங்களைத் தடுக்க சீருடைப் பிரிவுகளைவிட குற்றத் தடுப்பு வழிமுறைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். எடுத்துக்காட்டாக, வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பு அதிகம் இருக்கவேண்டிய பகுதிகளில் ஒவ்வோர் 50 மீட்டர் தூரத்துக்கும் உயர்தர காணொளிகளைப் பதிவுசெய்யும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்,” என்று டாக்டர் ஸாகித் குறிப்பிட்டார்.

“இணையக் குற்றவாளிகள் தாங்கள் செயல்படும் விதத்தை மேம்படுத்திக்கொண்டுள்ளனர். அதனால், அதிகாரிகள் அவர்களைவிடத் திறம்படச் செயல்படவேண்டும். தனிநபர்கள், குற்றக் கும்பல்கள் என இருவகை குற்றவாளிகளுக்கும் இது பொருந்தும்,” என்று அவர் விவரித்தார்.

இவ்வட்டாரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிநவீனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தவும் அதன் தொடர்பில் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்படவும் வேளை வந்துவிட்டது என்று டாக்டர் ஸாகித் தமது உரையில் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உருவெடுப்பதற்கு ஏற்றவாறு ஆசியானாபோல் போன்ற ஆசியான் உளவுத்துறைக் கட்டமைப்புகளும் மேம்படவேண்டும் என்று டாக்டர் ஸாகித் சுட்டினார். குறிப்பாக, என்றுமே கூடுதல் வேகத்துடன் இயங்கும் இணையக் குற்றவாளிகளுக்கு இது பொருந்தும் என்றார் அவர்.

“இணையக் குற்றங்கள், பயங்கரவாதம், எல்லை தாண்டிய குற்றங்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், முறியடிக்க சிக்கலானவையாகத் தொடர்ந்து மாறிக்கொண்டு வருகின்றன, ஒன்றுடன் ஒன்றுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தை நாம் எதிர்நோக்குகிறோம்,” என்று திரு ஸாகித் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்