இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு ‘மித்ரா’ மூலம் நிதியுதவி வழங்க பரிசீலனை

இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களுக்கு ‘மித்ரா’ மூலம் நிதியுதவி வழங்க பரிசீலனை

2 mins read
4c3e4308-2c3b-4f56-b238-484cb4892269
மலேசிய மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன். - படம்: பெர்னாமா
Google News Preferred Icon

கோலாலம்பூர்: இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (MITRA ) மூலம் வசதிகுறைந்த இந்தியச் சமூகத்தினர்க்கு 100,000 ரிங்கிட் நிதியுதவி வழங்குவது குறித்து மறுஆய்வு செய்யப்படுவதாக அந்நாட்டு மனிதவள அமைச்சர் ரமணன் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்தியச் சமூகத்திற்கான மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் அவர் பணியாற்றுகிறார்.

இதற்கு முன்பு வேறு பல முயற்சிகளில் ‘மித்ரா’ கவனம் செலுத்தியதால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்றார் திரு ரமணன்.

2024ஆம் ஆண்டில் அதிக மக்கள்தொகை கொண்ட இடங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு 100,000 ரிங்கிட் வழங்கத் திட்டமிடப்பட்டது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் அல்லாமல் உள்ளூர் இந்தியச் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களின் அடிப்படையில் அந்தத் திட்டம் அமைந்திருந்தது என்பதை அவர் சுட்டினார்.

“ஆனால், 2024ல் அது செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில், வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துதல், பள்ளிப் பராமரிப்பு உதவி, பாலர் பள்ளித் திட்டங்கள், பொது வசதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் என வேறு பல திட்டங்கள் இருந்தன,” என்றார் அமைச்சர் ரமணன்.

இந்த ஆண்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

‘மித்ரா’ திட்டத்தில் உள்ளோரைவிடவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தொகுதியில் உதவி தேவைப்படும் இந்தியர்கள் குறித்து நன்றாகத் தெரியும் என்பதால் கூடுதல் ஒதுக்கீட்டுடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் இது வழங்கப்படும்,” என்று அமைச்சர் ரமணன் மலேசிய நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கான கேள்வி-பதில் நேரத்தில் தெரிவித்ததாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇந்தியர்நிதியுதவிமனிதவள அமைச்சுசமூகம்