அமெரிக்க-சீன வரி ஒத்திவைப்பால் சரக்குக் கப்பல் தேவை உயர்ந்தது

2 mins read
580dd911-7d4c-4767-8f00-0e89b79d6d56
சீனாவின் ‌ஷென்சென்னில் உள்ள யன்டியென் துறைமுகத்தில் சரக்குகள் குவிந்துள்ளன. - படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலஸ்/ ஹாங்காங் - அமெரிக்காவும் சீனாவும் வரி விதிப்புகளை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகக் கடந்த வார இறுதியின்போது அறிவித்ததை அடுத்து சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் கொள்கலக் கப்பல் சரக்குகளின் முன்பதிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

அதன் விளைவாக சீனத் துறைமுகங்களிலும் தொழிற்சாலைகளிலும் ஏற்பட்டுள்ள பயங்கர நெரிசலை சரிசெய்ய பல வாரங்கள் எடுக்கலாம் என்று செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வரிகள் மறுபடியும் அமலுக்கு வருவதற்குள் அமெரிக்க இறக்குமதியாளர்கள் வீட்டுப் பொருள்களிலிருந்து கட்டுமானப் பொருள்கள், தானியக்கப் பாகங்கள் போன்றவற்றைப் பெற போட்டியிடுகின்றனர்.

அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதிகளில் கால்வாசிக்கும் அதிகமானவற்றைக் கையாளும் ஷென்சென் யன்டியென் போன்ற பெரிய துறைமுகங்களில் கூடியுள்ள சரக்குகளால் கப்பல் உரிமையாளர்கள் சரக்குகளுக்கான நேரத்தையும் அவற்றை இறக்குவதற்கான இடத்தையும் ஒருங்கிணைக்கத் திணறுகின்றனர்.

“தேவை அதிகமாக இருப்பதால் எங்களுடன் நீண்டகாலக் குத்தகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை வழங்க முடியும்,” என்று ஜெர்மானிய சரக்குக் கப்பல் பேச்சாளர் கூறினார்.

சரக்குக் கப்பல்களுக்கான அதிகரித்த முன்பதிவுகளால் அமெரிக்காவின் மேற்குக் கரை துறைமுகங்கள் இனி வரும் வாரங்களில் மிகவும் பரபரப்பான சூழலைக் கையாள வேண்டிய நிலை ஏற்படும்.

இருப்பினும் கொவிட்-19 கிருமிப்பரவலின்போது சமாளிக்க முடியாத அளவுக்குப் பெருகிய சரக்குகளின் எண்ணிக்கைபோல் இப்போது இல்லை என்ற நிபுணர்கள், இப்போது அதிகரித்துள்ள சரக்குகள் சமாளிக்கக்கூடிய நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

சீனாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயணங்களைக் கப்பல் உரிமையாளர்கள் குறைத்து வருவதால் கப்பல்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான இடங்கள் குறைவாகவே உள்ளன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இரண்டாம் தவணை வரி விதிப்பால் அமெரிக்க சில்லறை விற்பனை, வீட்டுக் கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகள் வலுவிழந்துள்ளன.

அவை சரக்குக் கப்பல்களின் முக்கிய உந்துசக்தி.

வரும் ஆகஸ்ட் மாதம் 90 நாள் காலக்கெடு முடியும்போது இறக்குமதிக்கான வரிகள் என்னவாயிருக்கும் என்று யாருக்கும் தெரியாது.

அதற்குள் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்றால் 54 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்