ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் கிம்பர்லி கில்ஃபொயில் அவரது ஆடம்பர வாழ்க்கைப் பாணிக்கும் மட்டும் பிரபலமானவர் அல்லர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகனின் முன்னாள் நெருங்கிய நண்பரான அவர் ஒரு கட்டத்தில் அவரை மணமுடிக்க நிச்சயம் செய்யப்பட்டிருந்து பிறகு அது நிறைவேறவில்லை.
அவரைச் சுற்றிப் பல சர்ச்சைகள் அவ்வப்போது எழுவதும் வழக்கமாகிவிட்டது. இரவுநேரக் கேளிக்கைகளில் அவர் பங்கெடுப்பதோடு, புகழ்பெற்ற பல சஞ்சிகைகளிலும் அவரது படங்கள் வெளிவந்தன.
ஒருமுறை அவர் கிரீஸ் நாட்டின் அரசாங்கத்தை அமெரிக்காவே ஏற்று நடத்தலாம் என்று கருத்துரைத்து அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆயினும் வேறுவிதக் காரணத்துக்காக தற்போது அவர் கிரீஸ் மக்களால் குறைகூறப்படுகிறார்.
கடந்த வாரம் பெயர் வெளியிடப்படாத அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் நன்கொடையாளர் ஒருவர் (அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்) கட்டண அட்டைக்கான தொகையைச் செலுத்தினால் அதிபரின் மூத்த அதிகாரிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகத் திருவாட்டி கில்ஃபொயில் கேட்டுக்கொண்டார் என்று கூறியிருந்தார். அச்சம்பவம் திருவாட்டி கில்ஃபொயில் தூதராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக நடந்தது.
அதுகுறித்து கிரீஸ் மக்கள் தங்களது கருத்துகளை வெளியிட்டிருந்தனர். கிரீஸ் ஒரு சிறிய நாடு என்பதால் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கேட்கும் எதையும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது என்று சிலர் கூறினர்.
மேலும் சிலர் அமெரிக்கத் தூதர் போன்ற ஆடம்பர வாழ்க்கை வாழ்வோரின் எதிர்பார்ப்புகள் வியப்பளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். மற்றொருவர், நல்ல நட்பு நாடான கிரீஸை அவமதிக்கும் நோக்கத்துடன் அதிபர் டிரம்ப் அத்தூதரை அங்கு அனுப்பிவைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
