கொழும்பு: பெருமழையாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மனிதநேய உதவியாகப் பாகிஸ்தான் உதவிப்பொருள்களை அனுப்பிவைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிவைத்த மருந்துகளும் உணவுப் பொருள்களும் ஓராண்டிற்கு முன்னரே காலாவதியானவை எனக் குறிப்பிட்டு, படங்களுடன் இணையவாசிகள் சிலர் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.
உதவிப் பொருள்கள் அடங்கிய பல பைகளில் ‘EXP: 10/2024’ எனக் காலாவதித் தேதி அச்சிடப்பட்டிருந்ததை அப்படங்கள் காட்டியதாகவும் பின்னர் அப்பதிவுகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.
பாகிஸ்தான் அனுப்பி வைத்த உதவிப்பொருள்கள் இலங்கை சென்றுசேர்ந்ததும் சோதிக்கப்பட்டன என்றும் அவற்றுள் பல பெட்டிகள் காலாவதியாகி இருந்தன அல்லது பயன்படுத்த இயலாத வகையில் இருந்தன என்றும் நியூஸ்18 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விவகாரத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட இலங்கை, முறைப்படியும் முறைசாரா அரசதந்திர வழிகளிலும் பாகிஸ்தானிடம் தனது மனக்குறையை வெளிப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி இணையவாசிகள் பலரும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
“குப்பையில் வீசுவதை விடுத்து, காலாவதியான உணவுப்பொருள்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கைக்கு அனுப்பிவைக்க பாகிஸ்தான் முடிவுசெய்தது,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மாச்சில்லு (பிஸ்கட்) பொதிகளில் சிங்கள எழுத்துகள் இருப்பதைச் சுட்டி, “இவை இலங்கை பிஸ்கட்டுகள் அல்லவா? இவை பாகிஸ்தானிலிருந்து வந்த உதவிப்பொருள்கள்போல் தெரியவில்லை,” என்று இன்னொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, நவம்பர் 28ஆம் தேதியிலிருந்து வான்வழியாக 53 டன் உதவிப்பொருள்களை இந்தியா இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

